முதல் பக்கத்திற்கு


1. டென்மார்க்கின் புதிய குடிமகனுக்கு வரவேற்பு



Audio

அன்புள்ள புதிய குடிமகனுக்கு,

புதிய வாழ்க்கையைப் புதிய நாட்டில் தொடங்குவது பெரிய மாற்றங்களைக் கொடுக்க வல்லது. நீங்கள் புதிய மனிதர்களையும் புதிய வழிகளில் வேலை செய்யும் முறைகளையும் சந்திப்பீர்கள். உங்களது பழைய பழக்கங்களிலிருந்து மாறுபடும் வழிமுறைகள், பண்புகள், பழக்கவழக்கங்கள் இவற்றுக்கு நீங்கள் அறிமுகப்படுத்தப்படுவீர்கள். குறிப்பாக ஆரம்பத்தில், உங்களை ஆட்கொள்ளக்கூடிய, குழப்பக்கூடிய பல சவால்களை நீங்கள் சந்திக்கக் கூடும்.

புதிய வாழ்க்கைப் பாதைமாற்றத்தை உங்களுக்கு எளிதாக்குவதே இப்புத்தகத்தின் நோக்கம். டென்மார்க் சமுதாயம் பற்றிய பொது விவரங்களையும், டென்மார்க்கின் புதிய குடிமகனாக அமையும் வாழ்க்கை விவரங்களையும் இது தருகிறது.

ஒருமுகமாக, சந்தேகத்துக்கு இடமில்லாதவாறு டென்மார்க் சமுதாயத்தைச் சித்திரிப்பது என்பது உண்மையில் இயலாது. பல நாடுகளைப் போல டென்மார்க்கும் பன்முகத்தன்மையுடய சமுதாயம்தான். இதில் பல்வேறு அரசியல் மற்றும் மத நம்பிக்கைகள், சமூக மற்றும் கலாசார மனோபாவங்கள் அடங்கியுள்ளன.

இப் பன்முகநோக்கின் நன்மைகளை அதிகரிக்க, சில அடிப்படைப் பண்புகளை ஆதாரமாகக் கொண்ட ஒரு சமூக உணர்வை நாம் அனைவரும் பெற வேண்டும். பால், வயது, நிறம், நம்பிக்கை இவற்றினால் வேற்றுமை பாராட்டாது ஜனநாயகம், பொதுநலம், சுதந்திரம், மக்கள் சமத்துவம், பிறரை மதிப்பது போன்றவை இப்பண்புகளில் அடங்கும். அனைவருக்கும் உரிமைகளும் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. சட்டத்தின் கீழ், சமமான அடிப்படையில் சமூகத்தின் அன்றாட வேலைகளில் எல்லோரும் தடையின்றி இடம் பெறலாகும்.

ஜனநாயகத் தேர்தல் முறையில் டென்மார்க் ஆட்சி அமைகிறது. அதாவது, குடிமக்கள் வட்டார மற்றும் தேசியத் தேர்தல்களில் அவர்கள் விரும்பும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கலாம். இன்னும் சில சுதந்திரங்களும் ஜனநாயகத்தில் அடக்கம். இவை கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், இதர வெளிப்பாடுகளுக்குச் சுதந்திரம், சங்கம் அமைக்கும் சுதந்திரம், சமயச் சுதந்திரம் ஆகும்.

ஜனநாயகமும், ஜனநாயக ரீதியில் தீர்மானங்கள் செய்வதும் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் முக்கியமானவை. ஜனநாயகச் செயல்முறைக்கு எல்லாக் குடிமக்களும் பங்கு கொள்வது அவசியமாகிறது. அதாவது வட்டார ஆளுகை, தொழிற்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், வாடகைக்குக் குடியிருப்போர் சங்கங்கள், குழந்தை/சிறுவர் பள்ளிகளின் மன்றங்கள் போன்றவை இவற்றில் பங்கு கொள்ளல் அவசியமாகும்.

சமத்துவம், அனைவருக்கும் சுதந்திரம் என்ற ஜனநாயகக் கோட்பாடுகள் தனி நபருக்கும், குடும்பங்களுக்கும் அவர்களுக்கேற்ற வாழ்க்தை அமைத்துக் கொள்வதை ஏற்கின்றன. ஆனால் இந்த ஜனநாயகக் கோட்பாடுகளே தனிநபரின் நடவடிக்கைகளுக்குச் சில வரையறுப்புகளையும் உண்டாக்குகின்றன. எவருக்கும் அநீதியாக துன்பம் ஏற்படக் கூடாது என்பதும் எவருக்கும் எவ்விதத்திலும் தீங்கு நேரலாகாது என்பதும் இவ்வரையறுப்புகளின் நோக்கம்.

இவ்வாறாக பால், இனம், நிறம், மத அல்லது அரசியல் கொள்கை, பாலியல் பற்றிய மனஅமைப்பு, ஊனம் இவற்றின் பெயரால் எவருக்கும் பாதக வேற்றுமை செய்யப்படுவதை டென்மார்க் சமுதாயம் ஏற்பதில்லை. துன்புறுத்தல்களையோ/ தாக்குதல்களையோ அல்லது முடமாக்கும் வகையில் புறப் பிறப்புறுப்பில் தோல் நீக்கம் செய்வதையோ அது ஏற்பதில்லை. மக்களுக்கும், மக்கள் தொகுதிகளுக்கும் மரியாதையளித்தல் மேலும் பிறர் மனத்தைப் புரிந்து கொள்ளல் என்பது டென்மார்க் சமுதாயத்தின் ஒரு அடிப்படைக் கொள்கை ஆகும்.

டென்மார்க் ஒரு பொதுநலச் சமுதாயம் என்ற உண்மையின் பொருள் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற சிறந்த வகையில் – கல்வி கற்றும், வேலை செய்தும், வரிகள் கட்டியும், தன்னையும் குடும்பத்தையும் பராமரித்தும் – சமுதாயத்துக்குப் பங்களிக்க வேண்டும் என்பது. இதற்குப் பதிலாக, இந்தச் சமுதாயம் அவசியமானபோது குடுமகனுக்குக் கை கொடுக்கிறது. மேலும் மிகப் பலவீனமான அங்கத்தினரையும் பாதுகாக்கிறது. உதாரணமாக, எல்லோருக்கும் இலவச மருத்துவம் மற்றும் மருத்துவமனைச் சேவைக்கு உரிமை உண்டு, வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர் இவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான விசேட ஆதரவுக்கும் உரிமை உண்டு. இது தவிர வேலை கிடைக்கப் பெறாதோர், அவர்கள் கல்வி பெறவோ அல்லது வேலை பெறுவதை எதிர்நோக்கும்/ முயற்சிக்கும் நிலையில், உரிமை-கடமை இவற்றை உள்ளிட்டவாறாக, உதவித் தொகை பெற இயலும்.

ஜனநாயகம், பொதுநலம், மக்களிடையே ஒருவருக்கொருவர் மரியாதை இவற்றின் அடிப்படையாலான ஒரு சமுதாயத்தை உருவாக்குவது பராமரிப்பது போன்றவை, புதிய குடிமக்கள் மற்றும் ஏற்கனவே உள்ள குடிமக்கள் அனைவருக்கும் ஒரு சவாலான செயல் ஆகும்.

நீங்கள் கொண்டு வரும் வேறுபட்ட முறைகள் நம் டென்மார்க் சமுதாயத்துடன் இழைந்து, புதிய வழிகாட்டி நற்சக்தியும் ஊட்டும் என்று நாங்கள் நம்புகிறோம், ஆகவே இப்போது இச்சமூகத்தின் உறுப்பினரான நீங்கள், இச்சமுதாயத்தில் திறம்படச் செயலாற்றுவீர்கள் என்பது எங்கள் எதிர்நோக்கு.

இவ்வறிமுகத்துடன், தங்களை டென்மார்க்கிற்கு வரவேற்கிறோம். இங்கு அமையவிருக்கும் புதிய வாழ்க்கையில் உங்களுக்கு நலமும் மகிழ்ச்சியும் ஏற்பட வாழ்த்துக்கள்.





கடைசி புதுநிலை: 30-06-2006
வெளியிடுவோர்: The Ministry of Refugee, Immigration and Integration Affairs
நுழைவாயில் பங்காளர்கள் அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகம் - டென்மார்க் குடியிறக்கச் சேவை