முதல் பக்கத்திற்கு


12. சுகாதாரம் மற்றும் நோயுறுதல்



டென்மார்க் சுகாதார சேவைAudio

சிகிச்சையும் நோய் தடுப்பும்

டென்மார்க் தேசிய சுகாதார சேவை, நோய் தடுப்பு சிகிச்சை இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது. நோய் தொற்று அபாயத்தைக் குறைப்பது நோய் தடுப்பு நடவடிக்கையின் நோக்கம். உதாரணமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றி தகவல் மூலம் நோயுற்ற அல்லது காயமுற்ற மக்களின் ஆரோக்கியத்தை மீட்பது, வலியை நீக்குவது முதலானவை சிகிச்சையின் குறிக்கோள்கள்.

  

டென்மார்க் சுகாதார சேவை

சிகிச்சையும் நோய் தடுப்பும்

டென்மார்க் தேசிய சுகாதார சேவை, நோய் தடுப்பு சிகிச்சை இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது. நோய் தொற்று அபாயத்தைக் குறைப்பது நோய் தடுப்பு நடவடிக்கையின் நோக்கம். உதாரணமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றி தகவல் மூலம் நோயுற்ற அல்லது காயமுற்ற மக்களின் ஆரோக்கியத்தை மீட்பது, வலியை நீக்குவது முதலானவை சிகிச்சையின் குறிக்கோள்கள்.

வாழ்வு முறை தொடர்பான நோய்கள்

டென்மார்க்கில் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் பிற வாழ்வு முறை தொடர்புடைய நோய்கள் ஆகியவை பொதுவாக அதிகம் காணப்படும் நோய்களில் சில. உடல் பருமன், புகை பிடித்தல், அதிகப்படியான மதுபானம், மிகக் குறைந்த உடற்பயிற்சி போன்றவை இந்நோய்களுக்கான சில காரணிகள்.

சீர்கெட்ட வாழ்க்கைத் தரம் மற்றும் பெரும் சுகாதாரச் செலவுகள்

இந்நோய்கள் பல மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பதுடன், டென்மார்க் சுகாதார சேவைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டென்மார்க் குரோனர்கள் செலவு வைக்கின்றன. ஆகையால், நோய் தடுப்பு, நல்ல ஆரோக்கியத்தை வளர்ப்பது ஆகிய இவ்விரண்டிற்கும் அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். காய்கறிகளை அதிகமாக உண்ணவும், கொழுப்பு சத்தைக் குறைக்கவும், புகை பிடிப்பதைக் குறைக்கவும், மதுபானம் அருந்துதலைக் குறைக்கவும் அதிகமாக உடற்பயிற்சி செய்யவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மனம் விட்டுப் பேசுதல் முக்கியம் வலுவான பாரம்பரியத்தின் காரணமாக, உடல் நலக் குறைவு, ஆரோக்கியம் ஆகியவை உணர்ச்சிபூர்வமானதாகவும் தனிப்பட்ட விஷயங்களாகவும் பல மக்கள் கருதுகிறார்கள். உடல்நலம், நோய் மற்றும் உடல் நலப் பராமரிப்பு பழக்கங்களைப் பற்றிய கருத்துகளில் வெவ்வேறு பண்பாடுகள் சந்திக்கும்போது தவறாகப் புரிந்து கொள்ளலும், முரண்பாடுகளும் – குறிப்பாக மொழிப் பிரச்னை இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் – சுலபமாகவே எழும். ஓர் அந்நிய மொழியில் உங்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் வெளியிடுவது சிரமமானது. சிகிச்சையின் முறை அல்லது நோயாளி என்ற முறையில் உங்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி போதிய தகவல்களை உங்களுக்குத் தெரிவிப்பது, டென்மார்க் மருத்துவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும். ஆகையால் உங்கள் சிகிச்சைத் திட்டம் அல்லது உணவு பற்றி உங்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டியது முக்கியமாகும். மற்ற நேயாளிகள் மற்றும் துப்புரவு நிலை கருதி, பணியாளர்கள் அவர் தம் பணியைச் செய்துகொண்டு போவதற்கு பரிவு காட்டுவது, அவர்களின் வேண்டுகோள்களின்படி நடந்துகொள்வது ஆகியவை முக்கியமாகும்.

தேசிய உடல்நலக் காப்பீடு மற்றும் தேசிய மருத்துவமனை சேவைAudio

ஒவ்வொருவருக்கும் ஒரு பொது மருத்துவர் இருக்கிறார்

எல்லா டென்மார்க்வாசிகளுக்கும் ஒரு பொது மருத்துவர் இருப்பார். நீங்கள் உடல்நலக் குறைவுற்றால் இந்த மருத்துவரைத்தான் நீங்கள் முதலில் தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் பொது மருத்துவர், நோய் தடுப்பு பற்றி உங்களுக்கு அறிவுரை கூறுவார். பல நோய்களுக்கு அவர் சிகிச்சையளிப்பார். உங்களுக்கு வேறு விதமான சிகிச்சை தேவையா அல்லது விசேட மருத்துவ நிபுணர் ஒருவர் உங்களைச் சோதிக்க வேண்டுமா என்பதைத் திறம்படத் தீர்மானிக்கக் கூடியவரும் அவரே.

 

தேசிய சுகாதார சேவைக்கு வரி விதிப்பு மூலம் பணம் தரப்படுகிறது

தேசிய சுகாதார சேவையும் தேசிய மருத்துவமனை சேவையும் தேவைப்படும்போது நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்க்க இயலும் அல்லது மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற இயலும் என்பதை உறுதி செய்கின்றன. இந்த சேவைகளுக்கான செலவுகள் வரி வருவாய் மூலம் ஈடு செய்யப்படுகின்றன. இதனால் நோயாளிகள் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள்.

செலவின் ஒரு பகுதியை நீங்கள் கொடுக்க வேண்டும்

எனினும், மருத்துவச் செலவின் பகுதியையும், மூக்குக் கண்ணாடி, பல் மருத்துவம், மருத்துவர் அல்லது மருத்துவமனை சிகிச்சையளிக்காத இதரவகைச் சிகிச்சைகள் இவற்றின் செலவையும் நீங்கள் கொடுக்க வேண்டும். ஆயினும் மருத்துவச் செலவுத் தொகையை உங்கள் நிலைமையையும் வருமானத்தையும் பொறுத்து, திரும்பப் பெறும் வசதி உள்ளது.

மருத்துவரை விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம்

நீங்கள் வசிக்கும் நகராட்சியில் தேசியப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளும் போது மருத்துவர் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். ஓர் ஆண் அல்லது பெண் மருத்துவரை உங்கள் விருப்பப்படித் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் தேசிய உடல்நலக் காப்பீடு அட்டையைக் கொண்டு வாருங்கள்

நீங்கள் பதிவு செய்துகொண்ட பிறகு உங்களுக்கு தேசிய உடல்நலக் காப்பீடு அட்டை ஒன்று கிடைக்கும். இது ஒரு சிறு மஞ்சள் நிற பிளாஸ்டிக் அட்டை. அதில் உங்கள் பெயர், முகவரி, சிவில் பதிவு எண் மற்றும் உங்கள் பொது மருத்துவர் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். டென்மார்க் தேசிய சுகாதார சேவையிலிருந்து நீங்கள் பணிகள் பெறுவதற்கு உரிமை தரும் ஆவணம் இந்த தேசிய உடல்நலக் காப்பீடு அட்டை.

உங்கள் மருத்துவர் அல்லது பல் மருத்துவரை சந்திக்கும்போது, அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் போகும்போது அல்லது நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் அப்போது இந்த அட்டையைக் கொண்டு செல்லுங்கள். நீங்கள் வெளிநாடு செல்லும்போதும் இதை உடன் கொண்டு போக வேண்டும்.

மருத்துவரின் அலுவலகத்தில்Audio

சந்திக்க நேரம் பதிவு செய்து கொள்ளுங்கள்

நீங்கள் உங்கள் மருத்துவரைப் பார்க்க விரும்பினால் அவரது அலுவலகத்துடன் சந்திப்பதற்கு ஒரு நேரத்தை முன்னதாகவே கேட்டு நிச்சயித்துக் கொள்ள வேண்டும். பல மருத்துவர்கள் வார நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை ஆலோசனைக்கென இருப்பார்கள். காலை வேளைகளில் தொலைபேசி மூலமாக கலந்தாலோசிக்கும் நேரங்களும் உண்டு. சாதாரணமாக, கேட்கையில் ஐந்து வேலை நாட்களுக்கு மேற்படாமல் பார்வை நேரம் கிடைக்கும். எனினும் நீங்கள் மிகவும் உடல்நலமற்று இருந்தால், அநேகமாக மருத்துவர், அதே நாளில் தனது நிரலில் நேரம் ஒதுக்கி, உங்களுக்கு வாய்ப்பளிப்பார்.

சோதனை, சிகிச்சை அல்லது உயர் மருத்துவ ஆலோசனைக்கு அனுப்புதல்

மருத்துவர் உங்களை பரிசோதனை செய்து, அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறார். அவர் சில மருந்துகளை உங்களுக்கு எழுதித் தரலாம். எனினும், எல்லா நிலைமைகளையும் மருந்தால் குணப்படுத்துவது இயலாது. உங்களை அவர் ஒரு விசேட மருத்துவ நிபுணரிடம், அதாவது ஒரு சரும நோய் மருத்துவர் அல்லது ஒரு மகப்பேறு மருத்துவர் போன்றவரிடம் அனுப்பலாம்.

உங்களுக்கு முதுகு வலி இருந்தால் மருத்துவர் உங்களை முதுகெலும்பு சிகிச்சை நிபுணர் அல்லது ஒரு உடற்கூறு சிகிச்சையாளரிடம் அனுப்புவார். அந்த சிகிச்சைக்கான செலவில் சிறிது நீங்கள் கொடுக்க வேண்டும்.

இறுதியாக, ஒரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கோ, தங்கி சிகிச்சை பெறவோ அனுப்பப்படலாம்.

அவசர கால மருத்துவச் சேவையும் தீவிர உதவியும்

மருத்துவ நேரங்களுக்கு அப்பால், மருத்துவ அவசர நிலைகள்

உங்கள் மருத்துவரின் நேரங்களுக்கு அப்பால் அதாவது வார நாட்கலில் பிற்பகல் 4 மணிக்குப் பிறகும் வார இறுதிகளிலும் விடுமுறை நாட்களிலும் எந்த நேரத்திலும் மருத்துவர் கவனிப்பு உங்களுக்கு தேவைப்பட்டால், நீங்கள் அவசர நிலை மருத்துவ சேவையுடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உள்ளூர் அவசர நிலை மருத்துவ சேவை தொலைபேசி எண்ணை, தொலைபேசி எண் புத்தகத்தில் காணலாம். தொலைபேசி எண் புத்தகத்தில் அவசர கால மருத்துவப் பணி தொடர்பு எண் கிடைக்கும்.



உங்கள் பொது மருத்துவருடன் சந்திப்புகள் - சந்திப்பிற்கு குறித்த நேரம் தவறாதீர்கள் சந்திப்பைக் கைவிட விரும்பினால், அதனை முன்னதாகவே மருத்துவரிடம் தெரிவியுங்கள், வேறு யாராவது அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள இயலும் மருத்துவர் கடுமையாக நோயுற்ற ஒருவரை பரிசோதித்துக் கொண்டு அல்லது அவருடன் உரையாடிக் கொண்டிருந்தால், உங்கள் சந்திப்பு நேரம் சற்று தாமதப்படலாம் மருத்துவரை தனியாகவோ அல்லது யாராவது ஒரேயொருவருடனோ சென்று சந்தியுங்கள்

நோயாளிகளின் நிலைமை பற்றி கேட்கப்படும் கேள்விகள்

அவசர நிலை மருத்துவ சேவையை நீங்கள் தொடர்பு கொள்ளும்போது, உங்கள்/நோயாளியின் நிலை பற்றி கேட்பார்கள் காயம் ஏதும் ஏற்பட்டால், அது எவ்வளவு கடுமையானது? காய்ச்சல் இருக்கிறதா ? இருந்தால் எந்த அளவு இருக்கிறது? போன்றவையும், உங்கள் பதில்களில் இருந்து உங்களிடம் ஒரு மருத்துவரை அனுப்ப வேண்டுமா? அல்லது நீங்களே சேவை இடத்துக்கு வர வேண்டுமா? அல்லது மருத்துவமனை அவசர நிலைப் பிரிவுக்கு நீங்கள் செல்ல வேண்டுமா? என்பதை சேவைப் பணியாளர்கள் தீர்மானிப்பாரகள். உங்கள் அல்லது நோயாளியின் சிவில் பதிவு எண்ணைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

அவசர நிலை மருத்துவ சேவை அவசியமானால் மட்டுமே

ஓர் அவசர நிலையின்போது அல்லது நிலைமை ஆபத்தானதா இல்லையா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாத போது மட்டுமே நீங்கள் அவசர நிலை மருத்துவ சேவையை தொடர்பு கொள்ள வேண்டும்.

அவசர நிலை 112

தீவிர அவசர நிலை

அவசர நிலையிலும், உயிருக்கு ஆபத்தான நிலைமைகளிலும் – உதாரணமாக, இரத்த நாளம் ஒன்று துண்டிக்கப்பட்டிருந்தால், நோயாளி மூச்சுவிட முடியாமல் போனால் அல்லது கடும் மார்பு வலி ஏற்பட்டால் – நீங்கள் உடனே தொலைபேசி எண் 112-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

அபாய எச்சரிக்கை மையம், உங்கள் பெயர், முகவரி, நீங்கள் அழைக்கும் இடத்தின் தொலைபேசி எண் ஆகியவற்றை கேட்கும். பிறகு அவர்கள் ஓர் ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்வார்கள் அல்லது தகுந்த உதவிக்கு வழி செய்வார்கள்.

பேச்சு மொழி பெயர்ப்பு சேவைகள்

அரசு அதிகாரிகள் தாங்கள் தெரிவிக்கும் செய்திகள் புரிந்து கொள்ளப்படுகின்றனவா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகையால் மருத்துவர்கள், தாங்கள் சொல்வது உங்களுக்கு புரிகிறதா இல்லையா என்று நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு உதவிக்கு ஒரு பேச்சு மொழி பெயர்ப்பாளரை வரவழைக்க மருத்துவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மனநிலைப் பிரச்சினைகள்

உள்ளத்தின் வலி

உள்ளத்து வலியின் வெளிப்பாடாக உடல்வலி இருக்கலாம் என்ற கருத்தின் அங்கீகரிப்பு டென்மார்க்கில் அதிகமாகி வருகிறது. உடலின் எந்தத் தொந்திரவும் காரணமாகப் புலப்படாமல் அல்லது உங்களுக்கு முதுகு, வயிறு வலி, தலைவலி, தூங்கும் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகள் இருந்தால், மருத்துவர் உங்கள் நிலைமைக்கு மனவியல் காரணிகள் ஏதும் இருக்குமோ என்று சோதிப்பார்.

மருத்துவரால் செய்யப்படும் நேர்காணல்

மருத்துவர் பிறகு உங்கள் பொதுவான ஆரோக்கியம் மற்றும் நல வாழ்வு பற்றி கேள்விகள் கேட்பார். உங்களுக்குக் கவலைகள் பல இருக்கின்றனவா, மண வாழ்க்கை பிரச்சினை ஏதும் இருக்கின்றதா, உங்கள் சொந்த நாட்டையும் உங்கள் குடும்பத்தையும் பிரிந்து வாழ்வதில் ஏதும் ஏக்கமாக உணர்கிறீர்களா, சிறைவாசம், சித்திரவதை, போர் போன்ற வேதனை நிகழ்ச்சிகளை அனுபவித்தீர்களா போன்றவை எல்லாம் கேட்பார்.

மருத்துவர் பணியிட இரகசியம் காக்க கடமைப் பட்டவர்

உங்கள் பிரச்சினைகளை விவரிப்பதில் முழு நம்பிக்கையுடன் செய்யலாம். ஏனெனில் மருத்துவர்கள் தொழில் இரகசியத்தைக் காக்க வேண்டும். மருத்துவரிடம் நீங்கள் சொல்வது எதுவும் வேறு எந்த அதிகாரி அல்லது நபருக்கும் தெரிவிக்கப்படாது.

மனவியல் உதவி

நேர்காணலின் முடிவுகளைப் பொறுத்து உங்கள் அறிகுறிகளிலிருந்து மருந்தினால் மட்டும் அவற்றை குணப்படுத்த முடியாது என்பதைக் கண்டறிந்து, மனவியல் நிபுணர் அல்லது வேறு பொருத்தமான சிகிச்சைக்கு மருத்துவர் உங்களை அனுப்பலாம்.

பல மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவோ அல்லது கடந்து நிற்கவோ, அதாவது திருமண முறிவு அல்லது ஒரு தீவிர இன்னலிலிருந்து விடுபட, மனவியல் உதவியை நாடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு மற்றும் வளரும் இளம்பருவத்தினருக்கு உடல்நலச் சோதனை

உடல் நலப் பரிசோதனை திட்டங்கள்

பிறந்து 5 வாரம் முதல் 15 ஆண்டுகள் வரை எல்லாக் குழந்தைகளுக்கும், கவனமாக வகுத்த திட்டத்தின்படி, குறைந்தது 9 தடவையாவது நோய்த் தடுப்பு மருத்துவச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் ஏழு உடல் நலச் சோதனைகள். குழந்தை பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கும் முன் நடத்தப்பட்டுவிடுகின்றன.

குழந்தை மற்றும் குடும்பம் பற்றி நேர்காணல்

முதல் சோதனையின்போது, குடும்பத்தின் பொதுவான நிலைமை, தாய்ப்பால் ஊட்டுதல் மற்றும் தூங்கும் பழக்கங்கள், குழந்தையின் முன்னேற்றம் மற்றும் நலம் பற்றி மருத்துவ கேள்விகள் கேட்கிறார். குழந்தையை முற்றிலும் பரிசோதனை செய்து, குழந்தைக்கு எப்படி உணவூட்ட வேண்டும், எப்படி செயலாற்றத் தூண்ட வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்துவார்.

அடுத்து வரும் சோதனைகளில், குழந்தையின் உந்து திறன்கள், அதன் உணர்வு மற்றும் மொழி வளர்ச்சி, பள்ளி செல்வதற்கான பக்குவம், அன்றாட வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றை மருத்துவர் சோதிப்பார். குழந்தையின் நல வாழ்வையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும் பிரச்னைகள் ஏதாவது மேலும் கவனிக்கப்பட வேண்டுமா என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிக்க இந்த உடல் நல சோதனைகள் உதவும்.

குழந்தை பள்ளி செல்லத் தொடங்கும் வரை உடல்நல சோதனைகளுக்கு மருத்துவரிடம் நேரத்தை முன் ஏற்பாடு செய்து கொள்வது பெற்றோர்களின் பொறுப்பு. சுகாதாரப் பணியாளர் முதன் முறையாக வருகையில், பெற்றோர்களுக்கு ஒரு சிறு கையேட்டைக் கொடுப்பார். அதில் பல விஷயங்களுடன் சோதனைகள் எப்பொழுதெல்லாம் செய்ய வேண்டுமென்பதற்கான அட்டவணையும் அடங்கி இருக்கும்.

நீங்கள் சந்திப்பு நேரத்தை முன் ஏற்பாடு செய்ய வேண்டும்

குழந்தை பள்ளி செல்லத் தொடங்கும் வரை உடல்நல சோதனைகளுக்கு மருத்துவரிடம் நேரத்தை முன் ஏற்பாடு செய்து கொள்வது பெற்றோர்களின் பொறுப்பு. சுகாதாரப் பணியாளர் முதன் முறையாக வருகையில், பெற்றோர்களுக்கு ஒரு சிறு கையேட்டைக் கொடுப்பார். அதில் பல விஷயங்களுடன் சோதனைகள் எப்பொழுதெல்லாம் செய்ய வேண்டுமென்பதற்கான அட்டவணையும் அடங்கி இருக்கும்.

 

நோய்தடுப்பு மருந்துகள்

இலவச நோய் தடுப்பு மருந்துகள்

அபாயமான பல நோய்களுக்கு, தடுப்பு மருந்துகள் அனைத்து குழந்தைகளுக்கும் தரப்படுகின்றன. அவை இலவசமாகத் தரப்படுகின்றன. மேலே விவரிக்கப்பட்ட உடல்நலச் சோதனை தொடர்பாக அவை மேற்கொள்ளப்படும்.

டிப்தீரியா (தொண்டை அடைப்பான்), டெட்டனஸ், தசை விறைப்பு, கக்குவான் இருமல், இளம்பிள்ளை வாதம், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா மூளை காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான தடுப்பு மருந்து குழந்தைகளுக்கான நோய் தடுப்புத் திட்டத்தில் அளிக்கப்படுகின்றன.

ரூபெல்லா ஒருபோதும் கண்டிராத, நோய் தடுப்பு மருந்து கொண்டிராத பெண்கள் கருத்தரிக்கும் முன் நோய் தடுப்பு கொள்ள வேண்டும். ஏனெனில் கருத்தரித்த பெண்களுக்கு ருபெல்லா நோய் வந்தால், ஊனமுடன் குழந்தை பிறக்கும் அபாயம் உண்டு.

வெளி நாட்டுப் பயணங்களுக்கு நோய் தடுப்பு மருந்து கட்டணங்கள் வசூலிக்கப்படும்

மேலே குறிப்பிட்ட இலவச நோய் தடுப்பு மருந்துகளுக்கு மாறாக, வெளிநாட்டுப் பயணத்திற்குத் தேவையான சிறப்பு நோய் தடுப்பு மருந்துகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வயது நோய் தடுப்பு மருந்து திட்டம்
3 மாதங்கள்டிப்தீரியா – டெட்டனஸ் – கக்குவான் இருமல்- இளம்பிள்ளை வாதம், ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளுயன்சா டைப் B*
5 மாதங்கள்டிப்தீரியா – டெட்டனஸ் – கக்குவான் இருமல் – இளம்பிள்ளை வாதம், ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளூயன்சா டைப் B*
12 மாதங்கள்டிப்தீரியா – டெட்டனஸ் – கக்குவான் இருமல் – இளம்பிள்ளை வாதம், ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளூயன்சா டைப் B*
15 மாதங்கள்MFR நோய்தடுப்பு மருந்து -1 ( தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா )
2 ஆண்டுகள்இளம்பிள்ளைவாதம் – சர்க்கரை 1**
3 ஆண்டுகள்இளம்பிள்ளைவாதம் – சர்க்கரை 2**
4 ஆண்டுகள்இளம்பிள்ளைவாதம் – சர்க்கரை 3**
5 ஆண்டுகள்டிப்தீரியா – டெட்டனஸ் 4
12 ஆண்டுகள்MFR நோய் தடுப்பு மருந்து 2 ( தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா )
18 ஆண்டுகள்ரூபெல்லா ( மகளிர் )

* ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளூயன்சா டைப் B பாக்டீரியா காரணமாக ஏற்படும் மூளைக் காய்ச்சல் மற்றும் குரல் வளை அழற்சி ( எபிக்லோடிஸ் லாரிஞ்ஜைடிஸ் )

** 2001-ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதியிலிருந்து, 2 வயது குழந்தைக்கு வாய்வழி போலியோ மைலிடிஸ் தடுப்பு மருந்து கொடுப்பது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக குழந்தைகள் ஐந்து வயதானவுடன் டிப்தீரியா – டெட்டனஸ் – கக்குவான் இருமல் – இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து தரப்படுகிறது. ஏற்கனவே இளம்பிள்ளைவாதத் தடுப்பு மருந்து, பெரிய குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் திட்டமிட்டபடி தொடரும். கடைசி நோய் தடுப்பு மருந்து கொடுக்கப்படும் 3 வயது – 4 வயது சோதனைக் காலம் வரை அது நீடிக்கும்.

 

இளம்பெண்ணுக்கு புற பிறப்புறுப்பில் தோல் அகற்றுதல் சட்டத்திற்கு புறம்பானது இளம் பெண்களுக்கு புற பிறப்புறுப்பில் தோல் அகற்றுதல் உடலை கடுமையாக சிதைப்பதாகும். அதனால் நோய்த்தொற்று, மலட்டுத் தன்மை, வாழ்க்கை முழுவதும் தொடரும் வலி, மனவியல் பிரச்சினைகள், இன்னும் விரிவான வகையில் மற்ற உடல் நலப் பிரச்னைகள் தோன்றலாம். பெண்கள் தோல் நீக்கம் சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் அது ஒரு சட்டப் புறம்பான குற்றச் செயல். ஆண்கள் நுனித்தோல் அகற்றல் சிறப்பு விதிகளுக்குட்பட்டது. மேலும் தகவல்களுக்கு உங்கள் பொது மருத்துவருடன் தொடர்பு கொள்ளவும்.

மருத்துவமனையில்Audio

கடும் நோய் அல்லது காயம் காரணமாகவோ, உங்கள் மருத்துவர் மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பியதாலோ நீங்கள் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்படலாம்.

விரும்பிய மருத்துவ மனையைத் தெரிவு செய்யலாம்

டென்மார்க்கில் நீங்கள் விரும்பிய மருத்துவமனையைத் தெரிவு செய்யலாம். சில நோயாளர்கள் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் சேருவதற்கு விரும்பலாம். இதன் காரணம் அது அவர்கள் குடும்பம் வசிப்பிடத்திற்கு அருகில் இருக்கக் கூடும் அல்லது அங்கு சிகிச்சைக்கு காத்திருப்போர் எண்ணிக்கையில் குறைவாக இருக்கக் கூடும். சோதனைக்கு அல்லது மருத்துவமனையில் சேருவதற்கு நீங்கள் விரும்பும் மருத்துவமனை எது என்பதை உங்கள் மருத்துவரிடம் தெரிவித்துவிட வேண்டும்.

மருத்துவப் பிரிவு அறைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை

டென்மார்க் மருத்துவமனைகளில் மருத்துவப் பிரிவு அறைகள் ஒன்று முதல் நான்கு நோயாளிகள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆண்களும் பெண்களும் தனித்தனி மருத்துவப் பிரிவு அறைகளில் இருக்கிறார்கள்.

மருத்துவர்கள் சுற்று வருதல்

மருத்துவர்களும், செவிலியர்களும் அன்றாடம் சுற்று வருகிறார்கள். மருத்துவர்கள் நோயாளிகளை சோதிப்பார்கள். சோதனைகளுக்கும் மருந்து சிகிச்சைகளுக்கும் நேரம் நிச்சயிப்பார்கள். நோயாளிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள்.

 

உணவும் பார்வைக்கு வருவோர்க்கான விதிகளும்

பார்வையாளர் நேரங்களிலும் காக்க வேண்டிய அமைதி மற்றும் நிசப்தம்

அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளைப் பார்க்க வருவோர்க்கு வருகை நேரங்கள் வைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நோயாளிகளுக்கு அமைதி, சப்தமின்மை வேண்டுவதால் ஒரு சமயத்தில் எத்தனை பேர் நோயாளியைப் பார்க்க வரலாம் என்று மருத்துவப் பிரிவு அலுவலகத்தை நீங்கள் கேட்க வேண்டும்.பார்க்க வருவோர் நேரத்திற்கு மாறான நேரத்தில் நீங்கள் வந்தால் கூடுதல் பரிவு இருக்க வேண்டும். நோயாளி படுக்கையை விட்டு எழுந்து நடமாட இயலுகையில், நோயாளியும், பார்க்க வருவோரும் மருத்துவப் பிரிவு அறையைத் தவிர்த்து பொது மக்கள் அறையை, வருகை நேரத்தின்போது பயன்படுத்த வேண்டும்.

மருத்துவமனை உணவு, உடை, சுகாதார வசதிகளை வழங்குகிறது

நோயாளிகளின் தேவை அனைத்தையும் மருத்துவமனை கவனித்துக் கொள்கிறது. உணவு, சலவை மற்றும் சொந்த சுகாதார வசதிகள் அவற்றில் அடங்கும். அத்துடன் தேவையான நடைமுறை உதவியையும் வழங்குகிறது. பழங்கள் தவிர வேறு உணவு எதையும் நோயாளிகளுக்கு கொண்டு வர நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள். நோயாளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட உணவுகள் தவிர பிற பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதியே அவ்வாறு செய்யப்படுகிறது.

விசேட உணவுத் தேவைகள்

நோயாளி என்ற முறையில் உங்களுக்கு ஏதாவது விசேட உணவுத் தேவைகள் இருந்தால் நீங்கள் மருத்துவமனை பணியாளர்களிடம் தெரிவித்தால், உதாரணமாக நீங்கள் ஒவ்வாமைகளினால் பாதிக்கப்பட்டிருந்தால், சைவ உணவு உண்பவராக இருந்தால், அல்லது பன்றி இறைச்சியை ஏற்காதவராயிருந்தால், உங்களுக்கு தனி உணவு வழங்கப்படும்.மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு நோயாளிகளுக்கு மட்டுமே. சில மருத்துவமனைகளில் உணவகங்கள் இருக்கின்றன. பார்வையாளர்கள் அங்கு உணவு வாங்கிக் கொள்ளலாம். மற்ற மருத்துவமனைகளில் மருத்துவமனை உணவிற்கான சீட்டுகளை விற்கின்றன.

மருத்துவமனையில் குழந்தைகள்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இரவில் தங்கும் வசதி

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இரவு தங்கும் வசதிகளைப் பெரும்பாலான மருத்துவமனைகள் கொண்டிருக்கின்றன. நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், பார்வையாளர் நேரத்திற்குப் பிறகு தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். சில மருத்துவமனைகள் பெற்றோர்கள் சாப்பிடும் உணவுக்கு கட்டணம் வசூலிக்கும்.

இழந்த வருவாய்களை ஈடு செய்தல்

பதினான்கு வயதிற்குட்பட்ட உங்கள் குழந்தை கடும் நோய்வாய்ப்பட்டால், நீங்கள் குறைந்த நேரம் வேலை செய்தாலும், அல்லது விடுப்பு எடுத்துக் கொண்டாலும் உங்களுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை உங்கள் நிறுவன நிர்வாகமும், நகராட்சியும் ஈடு செய்ய ஒப்புக்கொள்ளலாம்.

மனநல மருத்துவமனை

நேர்காணலும் மருந்து சிகிச்சையும்

விட்டில் உங்களை நீங்களே சமாளிக்க மடியாதவாறு உங்களுக்கு மனநோய் இருந்தால் இருந்தால், உங்களை ஒரு மருத்துவமனையில் சேரும்படி உங்கள் மருத்துவர் யோசனை கூறலாம். இங்கே உங்களுக்கு நேர்காணல் சிகிச்சை முறையும், அவசியமானால் மருந்து சிகிச்சையும் அளிக்கலாம். சிகிச்சை வழிமுறையை திட்டமிடுதலில் பங்கு கொள்ள நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள். உங்களைப் போன்ற நிலையில் உள்ளவர்களையும் நீங்கள் சந்திப்பீர்கள். பல மனநல மருத்துவமனைகள் நோயாளிகள் பலருக்கும் தனி மருத்துவப் பிரிவுகளைத் தருவதற்கு முன் வருகின்றன.

மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுதல்

தங்களுக்கோ அல்லது பிறருக்கோ அபாயமாக இருக்கலாம் என்று கருதப்படுபவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு மறுப்பு தெரிவித்தாலும் அவர்கள் விருப்பத்திற்கு எதிராக, ஒரு பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படலாம். பொது மருத்துவமனை போன்றே அங்கு சிகிச்சை இருக்கும். எனினும் நோயாளிகள், மேற்பார்வையின்றி மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பல் பராமரிப்புAudio

குழந்தைகளுக்கும் வளரும் வயதினருக்கும் பல் பராமரிப்பு

பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை, குழந்தைகளுக்கு இலவசமாக பல் பராமரிப்பு

டென்மார்க்கில் பிறந்தது முதல் 18 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக பல் பராமரிப்பு செய்யப்படுகிறது. அவர்கள் ஆண்டிற்கு ஒன்று அல்லது இருமுறை பல் மருத்துவரை ஆலோசிக்கிறார்கள். தங்கள் பற்களை எவ்விதம் பராமரிக்க வேண்டுமென்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. பல் சிகிச்சையும், பல் திருத்தமும் செய்யப்படுகின்றன.

இந்த பயனுள்ள தடுப்பு முறையால் டென்மார்க் மக்களின் பல் ஆலோக்கியம் உலகில் மிக உயர்ந்த ஒன்றாக உள்ளது. பெரும்பாலான குழந்தைகளுக்கு பற்குழிகள் இல்லை அல்லது மிகக் குறைவாகவே உள்ளன. குழந்தைகள் பற்களை இழப்பதும், பற்கள் எடுக்கப்படுவதும் மிக அரிது.

பால் பற்களை பராமரிப்புதில் நல்ல கவனம் செலுத்துங்கள்

வழக்கமாக குழந்தைகள் அனைவரும் இரண்டு வயது அடைவதற்கு முன்னர் பல் மருத்துவரிடம் அழைக்கப்படுகிறார்கள். குழந்தைக்கு அதுவரை பல் வளர்ந்திருக்காதெனினும், அவரிடம் ஆலோசனைக்குச் செல்வது நல்லது. பல் மருத்துவரைப் பார்க்க அவரது சிகிச்சை மையத்திற்குச் செல்ல குழந்தைக்கு இது ஒரு வாய்ப்பாகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பற்கள் எவ்விதம் நன்கு பாதுகாக்கப்படலாம் என்பதற்கு அறிவுரை பெறலாம். குழந்தைப் பருவத்தின் தொடக்கத்தில் பால் பற்கள் விழுந்து விடும் என்றாலும், அவை இருக்கும்வரை அவற்றை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் புதிய, நிரந்தரப் பற்களுக்கு சேதம் ஏற்படக்கூடும்.

நகராட்சிகள் பலவும் பள்ளி வழியிலான பல் மருத்துவ சிகிச்சை நிலையங்களுக்கு வகை செய்கின்றன. சில சிறு நகராட்சிகள், இப்பணிக்கு ஒரு தனியார் பல் மருத்துவரை ஏற்பாடு செய்துள்ளன. குழந்தைகளுக்கு இவ்வகை பல் பராமரிப்பும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

பள்ளியில் பல் பராமரிப்பு சேவை

குழந்தைகள் பள்ளி செல்லத் தொடங்கும்போது அவர்கள், பள்ளி வழியாக பல் சோதனைக்கு தானாகவே அழைக்கப்படுவார்கள். பல் மருத்துவப் பணியாளர்களும் பள்ளிக்கு வந்து குழந்தைகள் தங்கள் பற்களை கவனித்துக் கொள்ளும் முறையை கற்றுக் கொடுப்பார்கள்.

குழந்தைகள் கீழ்நிலை வகுப்புகளில் இருக்கும்போது, பெற்றோர்கள் அவர்களுடன் பல் மருத்துவரிடம் செல்வது நன்று வயது சற்று அதிகரித்த பிறகு அவர்கள் தாங்களே செல்லலாம். பெரிய சிகிச்சை ஏதும் தேவையிருந்தால் எப்போதும் பெற்றோரின் ஆலோசனை கேட்கப்படும்.

வயது வந்தவர்களுக்கு பல் பராமரிப்பு

தனியார் பல் மருத்துவரைப் பார்க்கவும்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தனியார் பல் மருத்துவர் ஒருவரை தேடிப் பார்க்க வேண்டும். உதாரணமாக உள்ளூர் தொலைபேசி புத்தகத்தின் வாயிலாக. பல் சோதனை மற்றும் சிகிச்சைக்கு பணம் நீங்கள் கொடுக்க வேண்டும். ஆனால் தேசிய சுகாதார சேவை, பல சேவைகளுக்கு செலவிட்ட பணத்தை ஈடு செய்கிறது. ஈடு தரும் தொகை, பல் மருத்துவர் கட்டணத்திலிருந்து தானாகவே குறைத்துக் கொள்ளப்படுகிறது.

ஒரு தனியார் சுகாதார காப்பீடு திட்டத்தின் வரம்பிற்குள் பெரிய சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை வரும்.

வழக்கமான பல் சோதனை ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை பல் சோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. அத்துடன் போதும் என்றிராமல், தொடக்கத்திலேயே பற்குழிகள் போன்ற பிரச்னைகள் வெளிப்பட இச்சோதனைகள் உதவும். மேலும், பல் மருத்துவச் செலவு அதிகம் கட்டுப்படியாவதுடன், சிகிச்சையும மிக விரிவாக இல்லாமல் இருக்கும்.

சந்திப்புக்கு நேரம் நிச்சயித்துக் கொள்ளவும்

உங்கள் பொது மருத்துவரிடம் செய்து கொள்வது போல் பல் மருத்துவரிடமும் சந்திப்பதற்கு நேரத்தை முன் கூட்டியே நிச்சயித்துக் கொண்டு, உரிய நேரத்தில் செல்ல வேண்டும். வழக்கமாக பல் மருத்துவரிடம் செல்கையில், அடுத்த சந்திப்பு எப்போது என்று அவர் தானாகவே சொல்லி விடுவார்.

சில பல் மருத்துவ சிகிச்சைக்கு பல தடவை போக வேண்டியிருக்கும்

சில சிகிச்சைகளுக்கு ஒன்றுக்கு மேலாக பல் மருத்துவரிடம் போக வேண்டிய தேவையிருக்கும். சிகிச்சை, நீண்ட காலத்திற்கு நீடிக்கலாம் – உதாரணமாக பல் திருத்தம் தேவையாக இருந்தால். சிகிச்சையை அரை குறையாக நிறுத்தாமல் இருப்பது முக்கியமாகும். முன்னால் இருந்ததை விடவும் பிரச்னைகள் மோசமடையக் கூடிய அபாயம் இதில் உண்டு.

பல் மருத்துவரை சென்று பார்க்க இயலாதவருக்கு பல் மராமரிப்பு

பல் மருத்துவரிடம் தாங்களே நேரில் போக இயலாதவர்களுக்கு, நகராட்சி பல் பராமரிப்பு வசதிகளை அளித்தாக வேண்டும். இது வழக்கமாக வயது முதிர்ந்தவர்கள் அல்லது கடுமையாக உடல் ஊனமுற்றவர்களுக்குப் பொருந்தும். நோயாளி, இந்த சேவையின் செலவில் ஒரு சிறு பகுதியை கொடுத்தால் போதுமானது.

அவசரகால பல் சிகிச்சை

பல் மருத்துவரின் அலுவல் நேரத்திற்கு அப்பாற்பட்ட வேளையில், உங்களுக்கு திடீரென கடுமையான பல் வலி ஏற்பட்டால் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அவசர நிலை பல் மருத்துவ நிலையத்திலிருந்து உதவி பெறலாம். பொதுவாக அனைத்து நேரங்களிலும் உதவி கிடைக்கும். உள்ளூர் தொலைபேசி எண்கள் புத்தகத்தில் இதற்கான தொலைபேசி எண்ணை நீங்கள் காணலாம்.

மருந்துகள்Audio

அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் மட்டும்

ஐரோப்பியக் குழு அல்லது டென்மார்க் மருந்துத் துறையின் ( Lægemiddelstyrelsen) அனுமதி பெற்ற பின்னரே உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளை, டென்மார்க் சந்தையில் விற்பனை செய்ய முடியும்.

மருந்துச் சீட்டு மருந்துகளும் கடையில் நேரிடையாகக் கிடைக்கும் மருந்துகளும்

டென்மார்க்கில் மருந்துசீட்டு மருந்துகளுக்கும் கடையில் நேரிடையாகக் கிடைக்கும் மருந்துகளுக்கும் வேற்றுமை செய்யப்படுகிறது. மருந்து சீட்டைக் காட்டி ஒரு மருந்துக் கடையிலிருந்து அவ்வகை மருந்தை நீங்கள் பெறலாம். கடையில் நேராக விற்கும் மருந்துகளை மருத்துவரின் சீட்டில்லாமல் வாங்கலாம். மருந்துச் சீட்டு அல்லாத மருந்துகளும் அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடையில் நேராகக் கிடைக்கும் சில மாற்றுவழி முறைகளையும், உதாரணமாக மிதமான தலை வலி, தொண்டைப்புண், இருமல், புகை பிடித்தலைத் தடுக்கும் மருந்து போன்றவற்றை, நீங்கள் அனுமதியளிக்கப்பட்ட மருந்துக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடியிலிருந்து வாங்கலாம்.

மருந்துக் கடைகளிலிருந்து மட்டுமே கிடைக்கும் மருந்துகள், டென்மார்க் முழுவதும் ஒரே விலையில் விற்கப்படுகின்றன.

மருந்து செலவு ஈடு செய்யும் முறை

சில மருந்துகளின் விலைக்கு ஈடு வழங்க தேசிய சுகாதார சேவை வகை செய்திருக்கிறது. நோய்க்கு அல்லது தேவைக்கு மருந்து வேண்டும் என்பதால் மக்கள் பணத்திற்கு சிரமம் அடையலாகாது என்பதற்காகத்தான் இவ்விதம் ஈடு கட்டப்படுகிறது. ஈடு செய்யப்படுவதற்கு தகுதியுடைய மருந்துகளுக்கு ஓராண்டில் எவ்வளவு செலவாகியிருக்கிறது என்பதைப் பொறுத்து ஈட்டுத் தொகை தீர்மானிக்கப்படும். மருந்து செலவை ஈடுகட்டுதல் விதிகள் பற்றி மேலும் தகவல் அறிய, உங்கள் மருத்துவருடனோ உள்ளூர் மருந்துக் கடையுடனோ தொடர்பு கொள்ளவும்.





கடைசி புதுநிலை: 31-08-2006
வெளியிடுவோர்: The Ministry of Refugee, Immigration and Integration Affairs
நுழைவாயில் பங்காளர்கள் அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகம் - டென்மார்க் குடியிறக்கச் சேவை