முதல் பக்கத்திற்கு


13. பழக்க வழக்கங்களும் மரபுகளும்



மத சம்பந்தமான விடுமுறைகள், தேசிய விடுமுறைகள், தேவாலயத் திருவிழாக்கள்Audio

ஆண்டில், மதம் மற்றும் தேசிய விடுமுறைகள் பல உண்டு. அப்போது, குழந்தைகளுக்கு பள்ளியில் விடுமுறை அளிக்கப்படும். வயது வந்தோர் பலரும் வேலைக்கு செல்வதில்லை. கடைகள் நாள் முழுவதும் அல்லது பாதி நேரம் மூடப்பட்டிருக்கும். அனைத்து மதம் சார்ந்த விடுமுறை நாட்களிலும், டென்மார்க் தேசிய தேவாலயத்தில் வழிபாடுகள் நடத்தப்படும்.

 

மிக முக்கியமான மத விடுமுறை நாள்கள் மூன்று பெரும் தேவாலயத் திருவிழாக்களுடன் தொடர்பு கொண்டவை. இயேசு பிரான் பிறந்ததைக் கொண்டாடும் நாளாகிய கிருஸ்துமஸ், சிலுவையில் அறையப்பட்ட நாள், இறப்பு மற்றும் மீண்டும் எழுதல் இவற்றை நினைவு கூறும் ஈஸ்டர், புனித ஆவியை வரவேற்கும் நினைவு நாளாகிய பெந்தாகாஸ்த் அல்லது விட்சன் ஆகியவை.

மதத் திருவிழாக்களை, குறிப்பாக கிருஸ்துமஸ் திருவிழாவை, பல மரபுகள் சூழ்ந்துள்ளன. திருவிழாக்களை மக்கள் பலரும், தங்கள் குடும்பம், உறவினர் மற்றும் நண்பர்களுடன் செலவிடுவதற்கான சந்தர்ப்பங்களாகக் கருதி வரவேற்கிறார்கள்.

மற்ற மத விடுமுறைகளில் இவை சில:

  • புத்தாண்டு தினம் ஜனவரி 1
  • Store Bededag (அனைத்து வழிபாட்டுநாள் – இது ஒரு டென்மார்க் தேசிய விடுமுறை நாள், ஈஸ்டருக்குப் பிறகு நான்காவது வெள்ளிக்கிழமையன்று வருவது). பல ஆண்டுகளுக்கு முன், தேவாலய நாள் காட்டியில் இருந்த பல வழிபாட்டு நாட்களை ஒன்றாகச் சேர்த்தபோது இந்த நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஏகும் நாள் – இயேசு பிரான் விண்ணுலகம் ஏகும் நாளை கிறித்துவ மக்கள் நினைவு கூரும் நாள்.

மிக முக்கியமான தேசிய விடுமுறை நாட்களாவன:

  • மே 1 அனைத்து நாடுகள் தொழிலாளர் தினம்
  • ஜூன் 5 அரசியல் சாசன தினம் 1849-இல் டென்மார்க்கின் முதல் அரசியல் சாசனம் கையொப்பமிட்டதன் நினைவாக கொண்டாடப்படுவது.


கிருஸ்துமஸ் கிருஸ்துமஸ் நாளுக்கு முதல் மாலை, டிசம்பர் 24, குடும்பங்கள் ஒன்று கூடி கிருஸ்துமஸ் இரவு விருந்து உண்டு, ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள் வழங்கிக் கொள்வார்கள். பெரும்பாலான மக்கள் அலங்கரிக்கப்பட்ட ஊசியிலை (கிறிஸ்துமஸ்) மரத்தைச் சுற்றி நடனம் ஆடுவார்கள். கிருஸ்துமஸ் கேரல்ஸ் எனப்படும் பாடல்களைப் பாடுவார்கள். பல மக்கள் தேவாலயத்தில் கிருஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். கிருஸ்துமஸ் கொண்டாட்டம், நவம்பர் மாதம் வீதிகளிலும் கடைகளிலும் தொடங்குகிறது. அவை ஊசியிலை மரங்களாலும், கிருஸ்துமஸ் இதயச் சின்னங்களாலும், சம்மனசுகளின் மற்றும் வன தெய்வங்களின் உருவங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். டிசம்பரில் பல பணியிடங்களில் கிருஸ்துமஸ் பகல் விருந்து நடக்கும். குழந்தைகள் கிருஸ்துமஸ் பரிசுகளைத் தயாரித்து அளிப்பது, அலங்காரம் செய்வது இவற்றை மழலையர் பள்ளிகள், பள்ளி நேரத்திற்குப் பின் ஓய்வு விளையாட்டு மையம் மற்றும் பள்ளியில் செய்கிறார்கள். பல குழந்தைகளிடம் அவதார நிகழ்வு விவரம் கொண்ட நாள்காட்டி ஒன்று இருக்கும். தொலைகாட்சி நிலையங்கள் டிசம்பர் 1 முதல் 24 வரை அவதார நிகழ்வு விவர நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும். டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில், அதாவது கிருஸ்துமஸ் நாளின் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில், பல குடும்பங்களில் கிருஸ்துமஸ் பகல் விருந்துகள் நடக்கும்.

விருந்துகளும், சமூக ஒன்று கூடல்களும்

டென்மார்க்கில் மக்கள் அனைத்து விதமான சந்தர்ப்பங்களிலும் – அதாவது திருமணங்கள், ஞான ஸ்நானம் உறுதிப்படுத்துதல்கள், பிறந்த நாள்கள் மற்றும் மதத் திருவிழாக்கள், புதுமனை புகுதல், கல்வியை நிறைவு செய்தல், வெளிநாட்டுப் பயணம் அல்லது விருந்தளிக்க வேண்டுமென்று விருப்பம் கொண்டால் – விருந்து வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

நண்பர்களும் உறவினர்களும் உடன் வேலை செய்பவர்களும், விருந்துக்கு அழைக்கப்படுகிறார்கள். இரவு வெகு நேரம் வரை நடனம் ஆடுதலும் சில சமயம் இருக்கும். நீங்கள் ஒரு விருந்துக்கு அல்லது சம்பிராதயமான இரவு சாப்பாட்டிற்கு அழைக்கப்பட்டால், ஒரு சிறு அன்பளிப்பை விருந்து கொடுப்போருக்கு வழங்குவது எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் பிறந்த நாள் விழாவுக்கு அழைக்கப்பட்டால், உதாரணமாக ஒயின் பாட்டில், மலர்கள், சாக்லேட் போன்றவை பரிசுப் பொருளாக அளிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்டர் மற்றும் விட்சன் ஈஸ்டர் மார்ச் அல்லது ஏப்ரலிலும், விட்சன் மே அல்லது ஜூன் மாதத்திலும் ஆண்டுதோறும் வரும். இயேசு மீண்டும் உயிர்த்தெழுதலை கிறித்துவர்கள் கொண்டாடுவது தொடர்புடைய மரபுகள் இதில் உண்டு. அவை தவிர, டென்மார்க் மக்கள் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் முட்டைகளைக் கொடுத்துக் கொள்ளும் பழைய மரபு ஒன்றையும் கொண்டுள்ளார்கள். இந்த முட்டைகள் வழக்கமாக சாக்லேட்டால் செய்யப்பட்டிருக்கும். முட்டைகள் பண்டைய காலத்தின் கருவுறும் திறத்தின் சின்னம். விட்சன் நாளன்று காலையில், அதிகாலை எழுந்து சூரியன் நடனமிடுவதைப் பார்ப்பது, சிறப்பு பகல் விருந்து ஒன்றை நடத்துவது போன்ற மரபுகள், உதாரணமாக காடுகளில் பிக்னிக் செய்வது, வழக்கமாக உள்ளன.


குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

பள்ளிக்கு முந்தைய மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளின் பல பெற்றோர்கள், குழந்தையின் நண்பர்களையும் வகுப்புத் தோழர்களையும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அழைக்கிறார்கள். சிலர் சிறுவர்களை மட்டும் அல்லது சிறுமிகளை மட்டும் அழைக்கிறார்கள். மரபு ஒட்டிய டென்மார்க் குழந்தைகளின் பிறந்த நாள் விருந்தில் அளிக்கும் உணவில் வழக்கமாக பல அடுக்கு பிறந்த நாள் கேக், பன்கள், சூடான சாக்லேட் அல்லது குளிர் பானங்கள் ஆகியவை அடங்கியிருக்கும். குழந்தைகள், பிறந்த நாள் சிறுமி அல்லது சிறுவனுக்கு பிறந்த நாள் பாடலைப் பாடுவர். அனைவரும் சேர்ந்து விளையாடுவார்கள். கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்ட குழந்தைகள் பரிசு கொண்டு வருவது எதிர்பார்க்கப்படும். உங்கள் குழந்தை என்ன பரிசைக் கொண்டு செல்ல வேண்டும், எத்துணை மதிப்புல்ளது என்று உங்களுக்கு தெளிவாகத் தெரியாவிட்டால், மற்ற பெற்றோர்களை நீங்கள் கேட்கலாம்.

பரிகாசமும் நகைச்சுவையும்

டென்மார்க்கில், நகைச்சுவை தகவல் பரிமாற்றத்தில் முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது. பரிகாசமாகப் பேசுவதும், பரவலாக வழக்கத்தில் உள்ளது. இதனால் பல பணியிடங்களிலும் பேச்சு சில சமயம் மென்மை இல்லாதது போல் தோன்றும். மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது முரட்டுத்தனமாக இருப்பது போல் தோன்றும். இந்த வகை உரையாடலுக்கு பழக்கமில்லாதவர்களை அது சற்று அதிர்ச்சி அடையச் செய்யலாம். எனினும் நிங்கள் ஒருவரை ஒருவர் விரும்பி மரியாதை செலுத்துகிறீர்கள் என்பதை பல சமயமும் காட்டும் வழிதான் அது. மேலும் சிறு சீண்டல்கள் நண்பர்களிடையே ஏற்கப்பட வேண்டும்.

நேர உணர்வு

டென்மார்க் மக்கள் நிறையவே நேரம் தவறாமையுடன் வாழ்கிறார்கள். நீங்களும் அவ்வாறே நேரம் முன்னரோ பின்னரோ இல்லாமல், குறித்த சந்திப்புகளுக்கு நேரம் தவறாமல் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.வேலையிலோ, தனிப்பட்ட முறையிலோ நிச்சயித்துக் கொண்ட நேரங்களுக்கும் மற்றும் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருடன் நிச்சயித்துக் கொண்ட சந்திப்புகளுக்கும் இது பொருந்தும். தாமதமாக வருவதும் அல்லது தகுந்த காரணமில்லாமல் வராமலே போவதும், உங்களை விரும்பத்தகாதவராக ஆக்குவது உறுதி.

மது பானமும் மோட்டார் வாகனம் ஓட்டுதலும்

நீங்கள் அளவுக்கு அதிகமாக மது பானம் அருந்தியிருந்தால் மோட்டார் வாகனம் ஓட்டிச் செல்வது சட்ட விரோதமானது. சமூக ரீதியில் ஏற்புடையதும் அல்ல. இரத்தத்தில் மதுபானச் செறிவு 0.5 மில்லி கிராம்/மில்லி லிட்டர் அல்லது அதற்கு மேல் இருந்து கார் அல்லது மோட்டார் சைக்கிளை ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.



டென்மார்க் தேசியக் கொடி ஒரு பழைய நம்பிக்கையின்படி டென்மார்க்கின் தேசியக் கொடி (''Dannebrog'') 1219-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி எஸ்டோனியாவில் நடந்த ஒரு போரின் போது விண்ணுலகத்திலிருந்து விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. அரசு அதிகாரிகளும், தனி மக்களும் விசேட கொடி பறக்கும் நாட்களில் கொடியை பறக்க விடுகிறார்கள். மத விடுமுறை நாள்கள், சில அரச குடும்ப பிறந்த நாள்கள், அரசியல் சாசன தினம் (ஜூன் 5-ஆம் தேதி) போன்ற அனைத்து தேசிய விடுமுறை நாள்கள் ஆகியவை அந்த நாட்களில் உட்படும். டென்மார்க் மக்கள் தேசியக் கொடியை பல அதிகாரப்பூர்வமில்லாத நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, பல மக்கள், பிறந்த நாட்களின்போதும் ஆண்டு விழாக்களின் போதும் கொடியை மேஜையின் மீது வைக்கிறார்கள். கிருஸ்துமஸ் மரங்களை காகிதத்தாலான தேசியக் கொடியால் அலங்கரிக்கிறார்கள். தெருக்களிலும், கடைகளிலும் கிருஸ்துமஸ் அலங்காரங்களிலும் கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. கொடியை விரிவாக பயன்படுத்துவது ஒரு பழைய மரபு. ஆகவே, டென்மார்க் மக்கள் தேசிய உணர்வை வெகுவாய் பறை சாற்றுகிறார்கள் என்பது அதன் பொருளல்ல.

 

உடலும் பாலியலும்

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பொது இடங்களில் நிர்வாணக் காட்சிகளையும் பாலியல் உறவாடல்களையும் பல சமயம் காண நேரிடும். செய்தி ஏடுகளும், இதழ்களும் பாலியல் மற்றும் உடலுறவுகள் பற்றிய கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிடும். பல விளம்பரங்கள் மனித உடலை வெளிப்படையாகக் காட்டுகின்றன.

இது சமூகத்தில் பொதுவாக நிகழ்ந்துள்ள மாறுதலின் விளைவு. பாலியல் விஷயங்களில் தாராளமான மனப்போக்கிற்கு இது வழி செய்துள்ளது. கடந்த சில பத்தாண்டுகளில், புதிய வகை உறவு முறைகள் தோன்றியுள்ளன. மக்கள் தமது உடலை பல விதங்களில் பயன்படுத்துவதற்கு அதிக சுதந்திரம் பெற்றுள்ளார்கள். ஓரினச் சேர்க்கை கொள்வோரின் நிலைமை மேம்பட்டிருக்கிறது. எனினும் அது பொறுப்புடன் கூடிய சுதந்திரம். அதாவது, உங்கள் செயல்களுக்கு ஒரு வரம்பு உள்ளது என்பதே அதன் பொருள். 15 வயதுக்கு குறைந்தவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது குற்றமாகும். எவரையும் அவரது விருப்பத்திற்கு எதிராக எதுவும் செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது.

மற்றவர்களின் தனிப்பட்ட மற்றும் பாலியல் எல்லைகளை மதிப்பது தான் அடிப்படைக் கொள்கை. மக்கள், ஒரு பூங்காவிலோ, கடற்கரையிலோ சூரிய ஒளி தங்கள் மீது படுவதற்காக குறைவான ஆடையுடன் படுத்திருந்தாலோ, குறைவான ஆடையுடன் அல்லது ஆடையின்றி நீச்சலடித்துக் கொண்டிருந்தாலோ, அது உடலுறவுக்கான அழைப்பல்ல. உடை மூலமாக வெளிப்படுத்தும் அங்க அறிகுறிகள், உடலுறவுக்கு முன்வருவதற்கான சமிக்ஞைகளும் அல்ல.

பாலியல் மீறல்களை காவல் துறையிடம் புகார் செய்ய வேண்டும். இதன் மூலம், அவ்வாறு செய்வபவர்களை விசாரணைக்குட்படுத்தி, தண்டனை அளிக்க முடியும்.

இளம் வயது உடையவர்கள் பாலியல் வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கும் வயது கணிசமாக வேறுபடுகிறது. ஆனால், வளரும் இளவயது மக்களிடையே, ஆண் பெண் நட்பு நேர்வது மிகவும் பரவலானது. இந்த உறவுகளில் பலவும் ஒருவருக்கொருவர் பரிவையும் மதிப்பையும் அடிப்படையாகக் கொண்டவை.





கடைசி புதுநிலை: 31-08-2006
வெளியிடுவோர்: The Ministry of Refugee, Immigration and Integration Affairs
நுழைவாயில் பங்காளர்கள் அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகம் - டென்மார்க் குடியிறக்கச் சேவை