21. சொல் விளக்கத் திரட்டு
முழு முடியாட்சி (Enevælde)
மன்னர் அல்லது இளவரசரிடம் அறுதியான அதிகாரமும் உள்ள ஒரு வகை அரசியல் அமைப்பு முறை. டென்மார்க் 1661 முதல் 1848 பல்வேறு விதமான அறுதியான முடியாட்சியின் கீழ் ஆளப்பட்டு வந்தது.
செயல் துவக்கும் திட்டம்(Aktivering)
அறிமுகச் சலுகை*, ரொக்கச் சலுகை*, அல்லது வேலையின்மை சலுகை* பெறும் குடிமக்கள், வேலை செயல் துவக்கும் திட்டம் ஒன்றை ஏற்க உரிமை உண்டு. அதை ஏற்க கடமைப்பட்டவர்கள். அறிமுகச் சலுகை மற்றும் ரொக்கப் பணச் சலுகை பெறுவோர்க்கான செயல் தொடங்கும் திட்டங்களை நகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்து வழங்க முன் வருகிறார்கள். வேலையின்மை சலுகை பெறுவோருக்கான திட்டங்களை வேலை வாய்ப்பு சேவைகள் (AF) வழங்குகின்றன.
வேலை செயல் தொடக்கத்தில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வழிகாட்டுதலும் அரசு அல்லாத தனியார் நிறுவனங்ளில் வேலை பயிற்சி அல்லது சிறப்பு பயிற்சி நடவடிக்கைகளும் அடங்கும்.
வயது வந்தோர் கல்வி சங்கங்கள் (Oplysningsforbund)
வயது வந்தோர் கல்வியை ஒருங்கிணைந்து நிர்வகிக்கும் அமைப்புகளே வயது வந்தோர் கல்வி சங்கங்கள். குறிப்பாக ஓய்வு நேரக் கல்வி, மாலை நேர வகுப்புகள்* என்ற பகுதியையும் பாருங்கள்.
பைபிள் (Bibelen)
பைபிள் கிறித்துவ மதத்தின் புனித நூல். அது இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு முதலில் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது. அது கடவுளுக்கும் யூத மக்களுக்கும் இடையே உள்ள உறவு முறையை எடுத்துரைக்கிறது. புதிய ஏற்பாடு முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. அது, இயேசு கிறிஸ்து, அவரது சீடர்கள் மற்றும் முதலாவது கிறித்துவ தேவாலயத்தின் கதையைச் சொல்கிறது. கிறித்துவர்களுக்கு இயேசு கிருஸ்துதான் பைபிளில் மிக முக்கியமானவர். மிக சமீப காலத்தில் பைபிளின் டேனிஷ் மொழி பெயர்ப்பு 1992-இல் பிரசுரிக்கப்பட்டது. அது அரசி இரண்டாவது மார்கெரத்தாவின் டேனிஷ் பைபிள் என்று அழைக்கப்படுகிறது.
கட்டிட மேலாண்மை அலுவலகம் (Ejendommens administration)
ஒரு குடியிருப்புச் சொத்தை அதன் உடமையாளர் அமர்த்திய பணியாளர் நிர்வகிப்பது, வாடகை ஒப்பந்தங்கள், வாடகை வசூல் செய்வது, கவனிப்பாளர்களை அமர்த்துவது, நிர்வாக விஷயங்களில் வாடகைக் காரர்களுடன் தொடர்பை கையாளல் முதலான பணிகள் இதில் அடங்கும்.
ரொக்கப் பயன் (Kontanthjælp)
வருமானமோ, சேமிப்புகளோ இல்லாமல் தங்களையோ தங்கள் குடும்பங்களையோ ஆதரித்துக் கொள்ள இயலாமற் போகும் குடி மக்கள் ரொக்கப் பயன் பெற முடியும். இது வாழ்வதற்காக நகராட்சி வழங்கும் பணம். ரொக்கப் பயன் பெறுவதற்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்களே வேலை தேடுவதற்கு அனைத்து வழிகளையும் ஆராய்ந்திருக்க வேண்டும் அல்லது நகராட்சியிடமிருந்து வேலை தூண்டுதல் யோசனையை ஏற்றிருக்க வேண்டும். புதிய குடிமக்கள், டென்மார்க்கில் தாங்கள் வசிக்கும் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரொக்கப்பண உதவிக்கு தகுதி பெற மாட்டார்கள். அந்தக் கால கட்டத்தில் அவர்கள் ஒருமைப்பாடு பற்றிய டென்மார்க் சட்டத்தின்* பயன்களுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.
குழந்தை பொறுப்புரிமை (Forældremyndighed)
குழந்தை பொறுப்புரிமை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டிய கடமை, மற்றும் குழந்தைகளின் சிறந்த நலனைக் கருதி முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. திருமணமான பெற்றோர்கள் தானாகவே பொறுப்புரிமை பகிர்ந்து கொள்கிறார்கள். பெற்றோர்கள் மணமாகாதவர்களாக இருந்தால் பொறுப்புரிமை தானாகவே குழந்தையின் தாயைச் சேருகிறது - பெற்றோர்கள் தங்களுக்கிடையே வேறு விதமான உடன்பாடு கொண்டிருந்தால் தவிர. பெற்றோர்கள் பிரிந்து போனாலோ, மண முறிவு செய்து கொண்டாலோ பொறுப்புரிமை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து ஒரு தீர்மானம் செய்தாக வேண்டும். பொறுப்புரிமை தொடர்ந்து பகிர்ந்துகொள்ள பெற்றோர்கள் உடன்படலாம்.
மாவட்ட சபைகள் (Amtsråd)
2003-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி டென்மார்க் 13 மாவட்ட ஆட்சிப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு முக்கியமான வட்டார விஷயங்களுக்கு பொறுப்பாக ஆக்கப்பட்டன. மருத்துவமனைகள், சுகாதார கவனிப்பு, மேல்நிலை செகன்டரி கல்வி, இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெடுஞ்சாலை பராமரிப்பு போன்ற பொறுப்புகள் அவற்றிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்டங்களை பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட சபைகள் நிர்வகிக்கின்றன. ஒன்பது முதல் பதிமூன்று உறுப்பினர்கள் வரை கொண்ட அந்த சபைகள் நான்காண்டு பதவி காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
டென்மார்க் ஒருமைப்பாடு பற்றிய சட்டம் (Integrationslov)
1990-ஆம் ஆண்டு டென்மார்க் நாடாளுமன்றம் (Folketinget) டென்மார்க்கில் உள்ள ''அந்நிய நாட்டவர்களை ஒருமைப்படுத்தும் சட்டத்தை'' இயற்றியது. அது ஒருமைப்பாடு சட்டம் என்று அழைக்கப்படுகிறது. புதிதாக வந்து சேரும் அகதிகள் மற்றும் குடியிறங்குவோருக்கு டென்மார்க் சமூகத்தின் அரசியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு, சமூக மத மற்றும் பொது வாழ்க்கையில் சமமான வாய்ப்புகள் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள உதவுவதே இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். ஒரு குறுகிய காலத்திற்குள் புதிதாக வந்த குடிமக்கள் தங்களைத் தாங்களே ஆதரித்துக் கொள்ள இயலும்படி செய்வதும் அடிப்படை நெறிகளையும் டென்மார்க் சமூகத்தின் பணிபுகளையும் அவர்கள் புரிந்துகொள்ளச் செய்வதும் இதன் நோக்கம். நகராட்சி, அகதிகளுக்கு இருப்பிட வசதி செய்து தர வேண்டும் என்றும், புதிதாக வந்த அகதிகளுக்கும் குடியிறங்குவோருக்கும் ஒரு அறிமுகத் திட்டத்தை வழங்க முன்வர வேண்டும் என்றும் அச்சட்டம் கூறுகிறது.
ஒருமைப்பாடு பற்றிய சட்டத்தின் விதிகளின் கீழ்வரும் அனைவருக்கும், டென்மார்க் சமூகம் மற்றும் டென்மார்க் மொழிப் பாடங்களில் ஒரு பயிற்சியளிக்கப்படுகிறது. வேறு ஆதரவு வழியில்லாதவர்களுக்கு வேலையும் கல்வி சார்ந்த தூண்டுதல் திட்டங்களும் அறிமுகச் சலுகை* பணத்துடன் வழங்கப்படுகின்றன.
டென்மார்க் அந்நியர்கள் சட்டம் (Udlændingeloven)
வெளிநாட்டவர் டென்மார்க்கிற்கு வந்து வசிப்பதற்கான விதிகளை டென்மார்க் அந்நியர்கள் சட்டம் கொண்டுள்ளது. அதில் நுழைவு அனுமதி, வேலை மற்றும் வசிப்பு அனுமதிக்கான தேவைகள், நாடு கடத்துவதற்கான விதிகள் ஆகியவையும் அடங்கும்.
டென்மார்க் குடியிறக்கச் சேவை (Udlændingeservice)
டென்மார்க் குடியிறக்கச் சேவை, அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ்வரும் ஓர் அமைப்பு. எனினும் குடியிறக்கச் சேவை, அமைச்சகத்தின் தலையீடின்றி சுதந்திரமாக தீர்மானங்களைச் செய்யும். டென்மார்க்கில் அந்நிய நாட்டவர்கள் நுழைவு மற்றும் வசிப்பு தொடர்பான விரிவான பிரச்னைகளை அது கையாளுகிறது. உதாரணமாக அடைக்கலம், குடும்பம், மீண்டும் ஒன்று சேர்தல் மற்றும் நுழைவு அனுமதி, வேலை அனுமதி விண்ணப்பங்களைக் கையாளுகிறது. குடியிறக்கச் சேவை, குறிப்பிட்ட விண்ணப்பங்கள் மீது முடிவுகள் எடுத்து நுழைவதற்கும் வசிப்பதற்குமான நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கிறது.
டென்மார்க் தேசிய தேவாலயம் (Folkekirken)
டென்மார்க் அரசியல் சாசனப்படி (Grundloven) இவாங்கெலிக்கல் லூதரன் திருச்சபைதான் டென்மார்க் தேசிய தேவாலய முறை (Den Danske Folkekirke) ஆகும். அதன் பெயர் குறிப்பிடுவது போல் (Folkekirke, என்பது ''மக்களின் தேவாலயம்'' என்று பொருள்படும் ) டென்மார்க் மக்களில் பெரும்பாலானோர் இந்த திருச்சபையைச் சேர்ந்தவர்கள். மற்ற மதப் பிரிவுகளைவிட இது நாட்டுடன் நெருக்கமாக தொடர்புடையது. அரசியல் சாசனப்படி, அரசு தேவாலயத்தை ஆதரிக்க வேண்டும். அது எப்படி நடத்தப்பட வேண்டும் என்று டென்மார்க் நாடாளுமன்றம்* சட்டபூர்வமான வழிகாட்டி நெறிகளை விதித்துள்ளது. ஆனால், அரசு தேவாலயத்தின் செயல்களில் தலையிடும் போக்கு இராது. வழிபாடுகளில் மக்கள் கலந்து கொள்ளலாம். திருச்சபையின் உறுப்பினர்கள், தேவாலயத்தில் பெயர் சூட்டுவது, திருமணம் செய்து கொள்வது, இறந்தால் அடக்கம் செய்வது ஆகியவற்றிற்கு உரிமை உடையவர்கள். பல நூற்றாண்டுகளாக டென்மார்க்கில் அனைத்து பிறப்புகளையும் பதிவு செய்வதற்கும் தேவாலயம்தான் பொறுப்பு வகித்து வருகிறது. இது தெற்கு ஜட்லாந்திற்கு பொருந்தாது. எனினும் அங்கு இந்தப் பணியை சிவில் பதிவாளர் ஒருவர் செய்து வருகிறார். தேவாலய குருமார்களின் வேலையின் ஒரு பகுதி இறுதிச் சடங்கு சேவைகள். அவர்கள் இறந்தவர்களைப் புதைப்பது அல்லது எரியூட்டுவதற்கு அனுமதி அளிக்கிறார்கள்.
டென்மார்க் நாடாளுமன்றம் (Folketinget)
ஃபாக்கெட்ங்கெட் டென்மார்க்கின் தேசிய நாடாளுமன்றம். அதில் 179 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கிரீன்லாந்தைச் சேர்ந்தவர்கள் இருவரும் ஃபாரோ தீவுகளைச் சேர்ந்தவர்கள் இருவரும் இதில் அடக்கம்.
டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர்ந்தபட்சம் நான்கு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நான்காண்டு காலம் முடிவதற்குள் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் உரிமை பிரதமருக்கு உண்டு. நாடாளுமன்றத் தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் கிடைக்கிறது. இதன்படி தேர்தலில் கிடைக்கும் வாக்குகள் எண்ணிக்கை விகிதத்திற்குத் தக்கபடி அரசியல் கட்சிகளுக்கு இடங்கள் கிடைக்கும்.
டென்மார்க் இராச்சியம்(Rigsfællesskab)
டென்மார்க் இராச்சியம் என்பது டென்மார்க் அரசியல் சாசனத்தின் கீழ், டென்மார்க், ஃபாரோ தீவுகள் மற்றும் கிரீன்லாந்து இவற்றின் தேசப்பரப்பு. இவை பொருளாதார சட்டம், சமூகம் இவற்றில் ஒன்றாக இணைக்கப்பட்டவை. ஃபாரோ தீவுகளும், கிரீன்லாந்தும் நீட்டிக்கப்பட்ட உள் சுயாட்சியை டென்மார்க் இராச்சியத்திற்குள் கொண்டவை.
டென்மார்க் பணியிடச் சூழல் அதிகாரம் (Arbejdstilsynet)
டென்மார்க்கின் பணியிடச் சூழல் அதிகாரம், பணியிடங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்து பணி புரியத் தூண்டு்ம் சூழ்நிலை உருவாக்கும் பணிப் பொறுப்புடைய அரசு அமைப்பாகும். தொழில் நிறுவனங்களை மேற்பார்வையிட்டும், விதிமுறைகளை வகுத்தும் பணியிடச் சூழ்நிலை பற்றிய விஷயங்களைப் பிரசுரித்தும் அப்பொறுப்பை அது நிறைவேற்றுகிறது. இந்த ஆணையத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும், கோபன்ஹேகன் நகர் மற்றும் ஃபிரேடெரிக்ஸ்பெர்க் நகராட்சியிலும் அலுவலகங்கள் உண்டு.
டேன்கார்ட் (Dankort)
டேன்கார்ட் என்பது டென்மார்க் வங்கிகள் வழங்கும் சிறப்பு டென்மார்க் பணம் செலுத்து அட்டை நாடு முழுவதிலும் மின் அணுவியல் பண மாற்று முறை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.
மண்டல நீதிமன்றம் (Byret)
டென்மார்க் நீதித்துறை அமைப்பில், முதல் விசாரணை செய்யப்படும் மன்றம் மண்டல நீதி மன்றம். சிவில் நடவடிக்கைகளையும் பெரும்பாலான குற்ற வழக்குகளையும் அது கையாளுகிறது.
வட்டாரக் காவல் துறை புகார்கள் குழுமம் (Politiklagenævn)
கோபன்ஹேகன், ஜீலாந்து, ஃபனைன் ஆல்போர்க், விபோர்க் மற்றும் சோன்டெர்போர்க் ஆகிய பகுதிகளுக்கு பணியாற்றும் மண்டல காவல் துறை புகார்கள் குழுமங்கள் இருக்கின்றன. காவல் துறையினருக்கு எதிரான புகார்களையும், கடமையாற்றும்போது காவல் துறையினர் புரிந்ததாகக் கூறப்படும் குற்றங்களையும் கவனிப்பதில் அரசு வழக்கறிஞருக்கு* அவை உதவி செய்கின்றன. ஒரு மண்டல காவல் துறை புகார்கள் குழுமத்தில் தலைவராக ஒரு வழக்கறிஞரும் இரண்டு சாதாரண நீதிபதிகளும்* இருப்பார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம் (EU)
1993-ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய பொருளாதார சமுதாயம் என்று தான் குறிப்பிடப்பட்டு வந்தது. முதல் உறுப்பு நாடுகள் 1957-இல் ரோம் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டதிலிருந்து அந்தச் சமுதாயம் படிப்படியாக விரிவாக்கப்பட்டது. 1972-இல் ''மக்கள் கருத்துக் கணிப்பிற்குப்'' பின், டென்மார்க் ஐரோப்பியப் பொருளாதார சமுதாயத்தில் சேர்ந்தது. இன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் 15 உறுப்பு நாடுகள் இருக்கின்றன. மற்ற உறுப்பு நாடுகளாவன – ஆஸ்திரியா, பெல்ஜியம், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, இலக்சம்பர்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து.
ஐரோப்பிய பாராளுமன்றம் (Europa-Parlamentet)
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 626 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 15 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் குடிமக்கள் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உறுப்பினர்களின் எண்ணிக்கை உறுப்பு நாடுகளின் அளவைப் பொறுத்தது. டென்மார்க்கின் சார்பில் 16 உறுப்பினர்கள் உள்ளார்கள்.
இவாங்கெலிக்கல் லூதரன் (Evangelisk-luthersk)
டென்மார்க்கின் தேசிய தேவாலய முறை இவாங்கெலிக்கல் லூதரன் திருச்சபை ஆகும். 16-ஆம் நூற்றாண்டு சீர்திருத்த கால கட்டத்தில் ரோமன் கத்தோலிக திருச்சபையிலிருந்து பிரிந்து போன கிறித்துவ திருச்சபைகளில் ஒன்று இவாங்கெலிக்கல் லூதரன். இந்த தேவாலய முறையின் உபதேசங்கள் பைபிளையும் மிகப் பழைமையான கிறித்துவ தேவாலயங்களின் மூன்று ஒப்புதல் வாக்குமூலங்களின் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டவை. சீர்திருத்த காலத்திலிருந்து வந்த ஆக்ஸ்பர்க் ஒப்புதல் வாக்குமூலம், ''லூதரின் சிறு வினா-விடை'' ஜெர்மன் துறவி மார்டின் லூதர் எழுதிய கிறித்துவ மதத்தில் வழிகாட்டிக் குறிப்பு ஆகியவை அம்மூன்றும் அந்த ஒப்புதல் வாக்குமூல எழுத்துகள்.
மாலை நேர வகுப்புகள் (Aftenskole)
தனி முறையில் கல்வி கற்பித்தல், தன்னார்வ வகையில் ஒரு ஓய்வு நேர நடவடிக்கையாக செய்யப்படுகிறது. மாலை நேர வகுப்புகளில் பல வகையான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மொழிகள், வரலாறு, கணிணிப் பயிற்சி, தத்துவம், படைப்பாற்றல் முறைகள் முதலானவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. தனிக்கல்வி பயிற்சி, முறையான கல்வித் தகுதிக்கு வகை செய்வதில்லை. தேர்வுகளும் கிடையாது. வயது வந்தோர் கல்வி சங்கம்* ஒன்று வழக்கமாக வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறது.
நாட்டுமரபு உயர்நிலைப் பள்ளி (Folkehøjskole)
நாட்டு மரபு உயர்நிலைப் பள்ளி டென்மார்க்கில் 19-ஆவது நூற்றாண்டில் தோன்றியது. இது இளைஞர்களும் வயது வந்தோரும் தங்கிப் படிக்கும் ஒரு தனி வகை பள்ளி. பண்பாட்டையும், சமூகத்தையும் ஒரு பரந்த நோக்கில் புரிந்து கொள்வதற்கு வகை செய்வதே நாட்டு மரபு உயர்நிலைப் பள்ளியின் நோக்கம். இசை, கலை, விளையாட்டு, தத்துவம், சமூக ஆய்வுகள் போன்று பல வேறுபட்ட விஷயங்களை அவை கற்பிக்கின்றன. இக்கல்வி முறையான பட்டங்களை வழங்குவதில்லை. தேர்வுகளும் கிடையாது.
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரதிநிதி (Sikkerhedsrepræsentant)
ஒரு சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரதிநிதி என்பவர் அவரது உடன் வேலை செய்யும் ஊழியர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆவார். அவர், பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் ஊழியர்கள் சார்பில் பேசுவதற்குரியவர். இந்த பிரதிநிதிகள், இரண்டு ஆண்டு காலத்திற்கு, பணியாளர் பிரதிநிதிகள்* தேர்ந்தெடுக்கும் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் சிறப்புப் பயிற்சி திட்டம் ஒன்றை நிறைவு செய்ய வேண்டும்.
உயர்நீதி மன்றம் (Landsret)
டென்மார்க்கில் இரண்டு உயர் நீதிமன்றங்கள் உள்ளன. கிழக்கு உயர் நீதிமன்றம் (Østre Landsret) கோபன்ஹேகனிலும், மேற்கு உயர் நீதிமன்றம் (Vestre Landsret) விபோர்கிலும் உள்ளன. அரசு அதிகாரிகள் செய்யும் முடிவுகள் தொடர்பான வழக்குகளையும், கடும் குற்றங்கள் தொடர்பான குற்ற வழக்குகளையும், மண்டல நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரான மறு விசாரணைகளையும், இந்த உயர் நீதிமன்றங்கள் மேற்கொள்கின்றன.
வீட்டு உடைமையாளர்கள் சங்கம் (Grundejerforening)
இது, ஒரு குடியிருப்புப் பகுதியில் தனியார் வீட்டு உடைமையாளர்களின் சங்கம். நடைபாதைகள் மற்றும் பகிர்ந்து கொள்ளத் தக்க வசதிகளை பராமரிப்பது போன்ற பொது நலன் குறித்த விஷயங்களை இந்த சங்கம் கவனிக்கிறது.
அறிமுகச் சலுகை (Introduktionsydelse)
ஒருமைப்பாடு பற்றிய டென்மார்க் சட்டத்தின்* வரம்பிற்குள் வரும் சுயமாக வாழ முடியாத மற்றும் பிறரால் ஆதரிக்கப்படாத குடிமக்களுக்கு நகராட்சி வழங்கும் ஒரு படித்தொகையே இந்த அறிமுகச் சலுகையாகும்.
அறிமுகப் பள்ளி வசதி (Indskoling)
மழலையர் வகுப்பிலிருந்து 2-ஆவது வகுப்பு வரையில் (børnehaveklasse) அறிமுகப் பள்ளிக்காலம் என்று அழைக்கப்படுகிறது. மாணவர்கள் பள்ளிச் சூழலுக்கு இயல்பாகிக் கொள்ள பள்ளியும் ஆசிரியர்களும் சிறப்பு முயற்சி மேற்கொள்கிறார்கள். தனி மாணவரின் அறிவுக் கூர்மை, இசை, அவயங்கள் இயக்குத்திறன், சமூக வளர்ச்சி ஆகியவற்றை வலுப்படுத்துவது இதன் நோக்கம்.
சாதாரண நீதிபதி (Lægdommer)
நடுவர் குழுவினராக அல்லது சாதாரண மதிப்பீட்டாளர்களாக குற்றவியல் வழக்குகளில் அமரும் நபர்கள் சாதாரண நீதிபதிகள் இவர்கள். சட்ட ரீதியான நீதிபதிகளாக இல்லை.
உரிமக் கட்டணம் (Licens)
வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பெறுவதற்கு உரிமையுடைய வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் உடைமையாளர்கள் செலுத்தும் கட்டணம் உரிமக் கட்டணம் ஆகும். இக்கட்டணம், பொது சேவைக்* கடமைப் பொறுப்புகளுடன் நிறுவனங்கள் ஒளி-ஒலி பரப்பும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பணம் வழங்கிட பயன்படுத்துகிறது. அதாவது, ரேடியோ டென்மார்க் மற்றும் டென்மார்க் தொலைக்காட்சி 2 உரிமக் கட்டண வருமானங்களை, பண்பாட்டுத் துறை அமைச்சகம் நிர்ணயிக்கும் சதவீத அடிப்படையில் டென்மார்க் வானொலி மற்றும் தொலைக்காட்சி பகிர்ந்து கொள்கின்றன.
வட்டார சபை (Kommunalbestyrelse)
2003-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி டென்மார்க் 271 நகராட்சிகளாகப் (Kommuner) பிரிக்கப்பட்டது. ஒரு நகராட்சி என்பது ஒரு அரசு அமைப்பு. அந்த வட்டாரத்திற்குள் அதன் மக்களின் சார்பிலும், பல்வேறு பணிகளை அது மேற்கொள்கிறது. உள் சுயாட்சிக் கொள்கையின்படி நகராட்சிக்கு, தனித்துச் செயல்பட பரவலான வாய்ப்பு உண்டு.
இன்னும் விரிவானதொரு சட்ட அமைப்பிற்குள், குறிப்பாக சமூகத்துறையில் பல பணிகளையும் நகராட்சி நிறைவேற்றுகிறது.
உள்ளூர் செய்தி ஏடுகள் (Distriktsblade)
உள்ளூர் செய்தி ஏடுகள் வாரச் செய்தி ஏடுகள் ஆகும். விளம்பர வருமானங்களைக் கொண்டு நடத்தப்படும் அவை இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.
அடைமானக் கடன் கழகம் (Realkreditinstitut)
வீடு, மனை நிலம் போன்ற சொத்துகள் அடைமானத்தின் மீது கடன் பெறுதலே அடைமானக் கடன் எனப்படும். அந்தக் கடனுக்கு நீங்கள் உங்கள் சொத்தை உத்திரவாதமாக அளிக்க வேண்டும். இவ்வகைக் கடன் வழங்குவதில் அடைமானக் கடன் கழகங்கள் சிறப்பாக கவனம் செலுத்துகிறது. ஆகையால் அவை ஒரு வகை சிறப்பு வங்கியாக பணியாற்றுகின்றன.
தொழிலியல் காயங்களுக்கான தேசிய வாரியம்(Arbejdsskadestyrelsen)
தொழிலியல் காயங்களுக்கான தேசிய வாரியம் ஓர் அரசு கழகம். அது சமூக விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. தொழிலியல் காயங்கள் பற்றிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியை அது செய்கிறது. வேலை செய்யும்போது காயமடையும் மக்கள் இழப்பீடு கோருவதற்கான விதிகள் சட்டத்தில் அடங்கியுள்ளன.
கட்சி சாரா பட்டியல் (Borgerliste)
இது ஊராட்சித் தேர்தலில் போட்டியிடும் கட்சி சாரா வேட்பாளர்களின் பட்டியல். அரசியல் கட்சிகள் சாராத குறிப்பிட்ட வட்டார நலன்களைப் பேணுவதற்கு இத்தகைய பட்டியல்கள்அமைக்கப்படுகின்றன.
இலாப இலக்கற்ற வீட்டு வசதி சங்கம் (Alment Boligselskab)
இலாப இலக்கற்று இயங்கும் ஒரு அமைப்பு, சமூக வீட்டு வசதித் தேவைகள் பலவற்றை கவனிக்கிறது. இந்த சங்கங்களுக்கு குறிப்பிட்ட நோக்கங்கள் உண்டு. கட்டிடம் கட்டுதல், வாடகைக்கு விடுதல், நிர்வகித்தல், பராமரித்தல், அரசுத் துறை வீடுகளை புதுப்பித்தல் ஆகியவை அதன் நோக்கங்கள். சமூக ரீதியில் ( ஊனம் போன்று ) குறைபாடு கொண்ட மக்களுக்கு இலாப நோக்கற்ற வீட்டு வசதி துறையின் சில வீடுகளை ஒதுக்க நகராட்சிகளுக்கு உரிமை உண்டு. அதன் மூலம் சமூக வீட்டு வசதித் தேவைகள் ஓரளவுக்கு நிறைவு செய்யப்படுகின்றன.
15 வயதோ அல்லது அதற்கு மேலோ வயதுள்ள எவரும், வீட்டு வசதிக்குக் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறலாம். அதற்கு சிறு தொகை ஆண்டுக் கட்டணமாக செலுத்தினால் போதும். பட்டியலில் முதலிடத்திற்கு வரும்போது வீடு ஒதுக்கப்படும்.
மருந்துச்சீட்டு அல்லாத மருந்துகள் (Håndkøb)
சில வகை மருந்துகளை, மருத்துவர் குறித்தெழுதாத வகையில் நேராகக் கடையில் வாங்க முடியும்.
மக்கள் ஆதரவுக் கல்வி (Folkeoplysning)
மக்கள் ஆதரவுக் கல்வி, வயது வந்தோருக்கும் இளம் பருவத்தினருக்கும், தொழில் சாரா பயிற்சி மற்றும் பொது விஷயங்கள் பற்றிய அறிவையும் அளிக்கின்றன. வயது வந்தோர் கல்வி சங்கங்கள், நாட்டு மரபு உயர்நிலைப் பள்ளிகள், நூலகங்கள், கலாசார மற்றும் தேவாலய அமைப்புகள் போன்றவை மக்கள் ஆதரவுக் கல்வி அளிக்கின்றன. மேலும் விவரங்களுக்கு மாலை நேர வகுப்புகளைப்* பார்க்கவும்.
பிரசவத்திற்கு-பின் பிரிவு (Barselsgang)
ஒரு மருத்துவமனை பிரசவத்திற்கு-பின் பிரிவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் மகளிர் பிரசவமானவுடன் சேர்க்கப்படுகிறார்கள்.
கோபன்ஹேகனின் நிர்வாகத் தலைமை (Overpræsidiet)
கோபன்ஹேனின் நிர்வாகத் தலைமை (Københavns Overpraesidium) ஓர் அரசு அமைப்பு. கோபன்ஹேகன் நகரத்தைப் (Københavns Kommune) போன்ற சம பரப்புடைய பூமிப்பகுதி அதன் அதிகாரத்திற்குட்பட்டது. அதற்கு ஆளுநர் தலைவராக உள்ளார். மாநில மாவட்டங்களின்* பணிகளை ஒத்த பணிகளை செய்கிறார்.
உடைமைகளுக்கான நீதிமன்றம்(Skifteretten)
உடைமைகளுக்கான நீதிமன்றம் மண்டல நீதி மன்றத்தின்* ஒரு பிரிவு. இறந்தவர்களின் சொத்துக்களை நிர்வகித்தல், திவாலாவது, மண முறிவு பெற்றவர்களின் சொத்துப் பிரிவினை போன்ரவற்றை இது கவனிக்கிறது.
அரசு வழக்கறிஞர்கள் (Statsadvokat)
இவர் உயர் நீதி மன்றத்தில்* விசாரிக்கப்படும் குற்ற வழக்குகளில் அரசு சார்பில் வழக்காடுபவர்.
பொது சேவை
பொது சேவை சேனல்கள் சுயேச்சையானவை மற்றும் வர்த்தகம் சாரா வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேனல்கள், மக்கள் அனைவருக்கும் நிகழ்ச்சிகளை ஒலி பரப்பும் பணிப் பொறுப்பு இவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரேடியோ டென்மார்க் (DR) பொது மக்களுக்கான ஒரு சேவை அமைப்பு. ஒலி பரப்பு பற்றிய டென்மார்க் சட்டப்படி, அது பண்பாடு மற்றும் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளை ஒலி பரப்ப வேண்டும். அவற்றில் தரம், சமச்சீர், பல்வகை விஷயங்கள் இருக்க வேண்டும்.
மறு சுழற்சி வசதி (Genbrugsplads)
நகராட்சிகள் இயன்றளவு கழிவுகளை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால், அவை மறுசுழற்சி வசதிகளை நிறுவியிருக்கின்றன. அங்கு பொதுமக்கள் அட்டைகள், கண்ணாடி, உலோகங்கள், தோட்டக் கழிவுகள் முதலானவற்றிற்கு தனித்தனியே உள்ள கலங்களில் கழிவுகளைப் பிரித்துப் போட்டு விடலாம். சுற்றுச் சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் கழிவுகளை தனியாக அங்கீகரிக்கப்பட்ட கலங்களில் தனியாகப் போட வேண்டும்.
கருத்துக் கணிப்பு (Folkeafstemning)
நாடாளுமன்றம் ஒரு குறிப்பிட்ட கொள்கையை ஏற்றுக் கொண்டோ அல்லது ஏற்றுக்கொள்ள எண்ணியிருந்தாலோ அது பற்றி பொது மக்களின் வாக்குகளை கணிக்கும் முறையே கருத்துக் கணிப்பு. ஒரு கருத்துக் கணிப்பு அரசைக் கட்டுப்படுத்துவதற்காக இருக்கலாம் அல்லது வழிகாட்டியாக பயன்படலாம். டென்மார்க் அரசியல் சாசனப்படி, அரசியல் சாசனத் திருத்தங்களும், இறையாண்மை அதிகாரத்தை அனைத்து நாடு அதிகார அமைப்புகளிடம் கொடுப்பதும் கருத்துக் கணிப்பின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும். டென்மார்க்கின் மிகச் சமீப கால கருத்துக் கணிப்பு ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் உறவுகள் பற்றியது.
காவலில் வைப்பது (Varetægtsfængsling)
தண்டனைக்குரிய ஒரு குற்றத்தைச் செய்ததாக சந்தேகிக்கப்பட்டவர்களை வழக்கு விசாரணைக்கு முன் காவலில் வைப்பதே இவ்வாறு அழைக்கப்படுகிறது.
வாடகைக் கட்டுப்பாட்டுக் குழுமம் (Huslejenævn)
அனைத்து நகராட்சிகளும் வாடகைக் கட்டுப்பாட்டுக் குழுமம் ஒன்றை வைத்திருக்க வேண்டும். ஆனால் பல நகராட்சிகள் சேர்ந்து கூட்டு குழுமங்களை அமைத்துக் கொள்ளலாம். குழுமத்தில் மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள். இரண்டு பேரை நகராட்சி நியமிக்கும். உள்ளூர் வாடகையாளர்கள் சங்கங்களும் வீட்டு உடைமையாளர்கள் சங்கங்களும் சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை ஆதாரமாகக் கொண்டு நகராட்சிகள் அந்த நியமனத்தைச் செய்யும். மூன்றாவது உறுப்பினர், குழுமத்தின் தலைவராக இருப்பார். அவர் மாவட்ட ஆளுநர் நியமிக்கும் ஒரு வழக்கறிஞராக இருப்பார். வாடகை, தொகுப்பு வீடுகளின் பழுது நிலைமை, மற்ற வாடகைதாரர் தொடர்புடைய விவகாரங்கள் ஆகியவை பற்றிய புகார்களை வாடகைக் கட்டுப்பாட்டுக் குழுமம் கவனிக்கும்.
பிரதிநிதித்துவ ஜனநாயகம் (Repræsentativt demokrati)
ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பு ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் ஓர் அரசாங்க முறை. டென்மார்க்கில் டென்மார்க் நாடாளுமன்றத்திற்கு* மாவட்ட சபைகள்* மற்றும் வட்டார சபைகள்* உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
பிரதிநிதித்துவ அரசாங்கம் (Folkestyre)
பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் போன்றதே பிரதிநிதித்துவ அரசாங்கம்.
ஆவணங்களை அறிய அணுகும் உரிமை(Aktindsigt)
அரசுத் தொகுப்புகளில் உள்ள ஆவணங்களை (Offentlighedsloven) அறிய பொது மக்கள் அணுகுவதற்கான டென்மார்க் சட்டத்தின்படி மாநிலம், மாவட்டம் அல்லது நகராட்சி வசமுள்ள ஆவணங்களை அறிய அணுகுவதற்கு குடிமகன் எவருக்கும் உரிமை உண்டு.சில விஷயங்களில், ஆவணங்களை அறிய அணுக அனுமதி மறுக்கப்படலாம். உதாரணமாக தனி நபர், அந்தரங்கத்தை பாதுகாக்க, தேசிய பாதுகாப்பு அல்லது தேசிய பொருளாதார நலன்கள். சட்ட நடவடிக்கைகளின் கட்சிக்காரர்களுக்கு, அவர்கள் வழக்கில் தாக்கலான ஆவணங்களை அறிய அணுக அனுமதி வழங்கப்படுகிறது.
ஷென்கென் உடன்படிக்கை (Schengensamarbejdet)
ஷென்கென் உடன்பாடு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான பெல்ஜியம், டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், கிரீஸ், நெதர்லாந்து, இத்தாலி, இலக்சம்பர்க், போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நார்வேயுடன் நெருங்கிய ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டது. இவ்வுடன்படிக்கையின் கீழ், உறுப்பு நாடுகளின் குடிமக்கள் அந்நாடுகளுக்கிடையே எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, அதாவது எல்லைக் கட்டுப்பாடுகள் இன்றி, போய் வரலாம். 1997-இல் டென்மார்க் ஷென்கன் உடன்படிக்கையில் சேர்ந்தது.
ஷென்கென் தகவல் முறை(Schengeninformationssystemet)
ஷென்கென் உடன்படிக்கையின் ஒரு மையபாகம் ஒரு மின்னணுவியல் தொடர் அமைப்பு. இது உறுப்பு நாடுகளில் உள்ள அனைத்துக் காவல் துறை அலுவலகங்களிலும் தூதரகங்களிலும் அமைந்துள்ளது. தேடப்படும் மற்றும் காணாமற் போனவர்களைப் பற்றியும், காணாமற்போன அல்லது திருட்டுக்குள்ளான சொத்து மற்றும் வாகனங்களைப் பற்றியும் தகவல் தொடர்பு கொள்ள இது உதவுகிறது.
பணியாளர் பிரதிநிதி (Tillidsrepræsentant)
பணியாளர் பிரதிநிதிகளை ஊழியர்கள் தம்மில் ஒருவரை இரண்டாண்டு காலத்திற்கென தேர்ந்தெடுக்கிறார்கள். வேலைக்கு அமர்த்திக் கொள்வோருக்கு எதிராக ஊழியர்களின் நலன்களை கவனித்துக் கொள்வது அவர்களுடைய பணி. பணியிடத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்தின் சார்பிலும் பணியாளர் பிரதிநிதி இருப்பார்.
மாநில மாவட்ட அரசு (Statsamt)
மாவட்ட அரசு, மாநிலத்தின் வட்டார அரசாங்க அமைப்புகள், மாநிலத்தின் மாவட்டங்கள் இவற்றின் ஆட்சியின் வருகின்றன. அத்தகைய அலுவலகங்களும் கோபன்ஹேகன் நிர்வாகத் தலைமையும் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் தோராயமாக ஒரே மாதிரியான கடமைகள் அமைந்துள்ளன. ஆளுநர் (Statsamtmand) எனப்படுபவர் அலுவலகங்களுக்கு தலைவராக இருப்பார். சட்டப்படியான பிரிவு, மணமுறிவு, குழந்தை பாதுகாப்பு, அறியும் உரிமை இவற்றின் வழக்குகளை அவர் கவனிப்பார். நகராட்சி சட்டத்தை நிறைவேற்றுகிறதா என்று கண்காணிக்கும் மேற்பார்வைக் குழுமங்களின் செயலகமாகவும் அந்த அலுவலகங்கள் பணியாற்றுகின்றன.
வாடகையாளர்கள் சங்கம்(Beboerforening)
இது, ஒரே வீட்டு வசதி சங்கத்தின் வீடுகளில் வாடகைக்குக் குடியிருப்போரால் அமைக்கப்படும் ஒரு சங்கம். வீட்டு உடைமையாளர்களுக்கு எதிராக, குடியிருப்போரின் நலன்களைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் (Scanning med ultralyd)
ஒருவரின் உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஊடுருவிப் பரிசோதிப்பதற்குப் பயன்படும் கருவி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் எனப்படும். உடல் உறுப்புகளை அல்லது கருவறையில் கருவை படம் பிடிப்பதற்கு அல்ட்ரா ஸ்கேனிங் கதிர்களை அது பயன்படுத்துகிறது. ஒரு கருவின் அளவு மற்றும் பாலினத்தை பார்ப்பதற்கு ஸ்கேனிங் சாத்தியமாக்குகிறது. பிறப்பு முதலே இருக்கக் கூடிய உருவக் குறைபாடுகள் ஏதேனும் கடுமையாக இருக்கின்றனவா என்று கண்டுபிடிக்க உதவும்.
வேலையின்மை சலுகை (Arbejdsløshedsdagpenge)
வேலையின்மை சலுகையானது ஒரு பணம் வழங்கும் திட்டம். மக்கள் வேலையை இழந்து, வேலையின்மைக் காப்பீட்டு நிதியத்தில் பணம் செலுத்தியிருந்தால், அவர்களுக்கு பணம் பெற உரிமை உண்டு.
வேலையின்மை காப்பீட்டு நிதியம் (Arbejdsløshedskasse)
வேலையின்மை காப்பீட்டு நிதியம் (A-kasse) என்பது ஊதியம் அல்லது சம்பளம் ஈட்டுவோர் அல்லது சுயதொழில் செய்வோர்களின் ஒரு தனியார் அமைப்பு. அதன் உறுப்பினர்கள் வேலையில்லாமற் போனால், அவர்களுக்கு இவ்வமைப்பு நிதி உதவி செய்கிறது. நிதிகள், தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டவை. ஆனால், தொழிற்சங்க உறுப்பினர்கள் வேலையின்மை காப்பீட்டு நிதியத்தில் சேர வேண்டியதில்லை.
விளம்பரப் பக்கங்கள் (De Gule Sider)
தொலைபேசி எண் புத்தகத்தில் உள்ள சில பக்கங்கள் விளம்பரப் பகுதியாக இருக்கும். வணிக நிறுவனங்களின் பொருட்களும், சேவைகளும் அப்பக்கங்களில் பட்டியலிடப்படுகின்றன.