முதல் பக்கத்திற்கு


10. பொருளாதாரம் மற்றும் நுகர்தல்



உங்கள் பணத்தை நிர்வகித்தல்Audio

கவனிக்க வேண்டிய பல விஷயங்கள்

உங்கள் தனி பண விவகாரங்களை கவனிப்பது ஒரு சிக்கலான செயலாக இருக்க முடியும். ஒரு பக்கம் நீங்கள் ஊதியம் மூலம் பணம் ஈட்டலாம் அல்லது வேறு வடிவிலான வருமானத்தைப் பெறலாம். மற்றொரு பக்கம், வசிப்பிடத்திற்கு, மின்சாரத்திற்கு, உணவு, துணி முதலானவற்றிற்கு நீங்கள் பணம் செலவிட வேண்டியிருக்கும். இவற்றுக்கெல்லாம் மேலே உங்கள் வருமானத்தின் மீது வரி செலுத்தியாக வேண்டும்.

  

வங்கிக் கணக்கு

மின்னணு முறை பண மாற்றம்

இன்று, மக்களின் வங்கிக் கணக்கிற்கு பலவிதமான பண வழங்கல்களும், மின்னணு முறையில் பணம் மாற்றப்படுவதும் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, ஊதியங்களும், சம்பளங்களும், பணமும், குழந்தை சலுகைகளும், ஓய்வூதியமும் மாற்றப்படுகின்றன. அதனால், மக்களில் பலரும் ஒரு வங்கிக் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பில்களுக்கு தானாகவே பணம் வழங்கல்

நீங்கள் ஒரு வங்கிக்குள் நுழைந்து ஒரு கணக்கைத் தொடங்கலாம். உங்களுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருந்தால், உங்கள் பில்களுக்குரிய தொகைகளை உங்கள் கணக்கிலிருந்து வங்கி நேராக செலுத்தி விடுமாறு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

உங்கள் பில்களுக்கு பணம் செலுத்துவதற்கு தனியாக ஒரு கணக்கையும் நீங்கள் தொடங்கலாம் அல்லது வழக்கமான வங்கிக் கணக்கை விட அதிக வட்டி விகிதமுடைய சேமிப்புக் கணக்கு ஒன்றை தொடங்கலாம்.

டென்மார்க் தேசத்தவராக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை டென்மார்க் நாட்டவர் இல்லை என்பதற்காக உங்களுக்குப் பணம் கடன் கொடுக்க மறுப்பதற்கு வங்கிகளுக்கு உரிமை கிடையாது. உங்களுக்கு கடன் கொடுப்பதற்கு அல்லது உங்களுடன் ஒரு வாடகை ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு, நீங்கள் டேனிஷ் நாட்டவாராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க, தொழில் நிறுவனங்களுக்கு/வணிக நிறுவனங்களுக்கு உரிமை கிடையாது. எனினும், உங்களுக்கு முறையான வருமானம் இருக்கிறதா என்பதை விசாரிக்க அவற்றுக்கு உரிமை உண்டு.

பணம் செலுத்தும் அட்டைகள்

டேன்கார்ட்

உங்கள் நிதி நிலைமை திருப்தியாக இருப்பதாக வங்கி கருதினால், உங்களுக்கு டேன்கார்ட்* (Dankort) ஒன்று கிடைக்கலாம். பல இடங்களிலும் பணம் செலுத்துவதற்கு இந்த அட்டையை பயன்படுத்தலாம். உங்கள் பணத் தகுதியை மதிப்பிட்ட பிறகு உங்களுக்கு பணம் செலுத்தும் அட்டையை வழங்குவது பற்றி தீர்மானிக்கும்.

கடன் அட்டை வசதிகள்

பல கடைகளிலும் கடன் அட்டை வசதிகள் உண்டு. உங்களுக்கு ஒரு பற்றுக்கணக்கை அனுமதிப்பதா வேண்டாமா என்பது தனிப்பட்ட கடைகளின் விருப்பம்.

கடன்களும் வங்கி பற்று வசதிகளும்

நல்ல முறையான நிதி வசதி தேவை

பல வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடன்களும் பற்று வசதிகளும் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றன. ஆனால் உங்களுக்கு நியாயமான அளவு நிலையான வருமானமும், உங்கள் நிதி விவகாரங்கள் நல்ல முறையிலும் இருக்க வேண்டும் என்று அவை விரும்பும்.

கூடுதல் பணம் வழங்கல் வசதி

நீங்கள் சுயதொழில் செயபவராக இருந்து உங்கள் வருமானம் ஒரே சீராக வராதிருந்தால் கூடுதல் பணம் வழங்கல் வசதி ஒரு நல்ல தீர்வாக இருக்கக்கூடும். கூடுதல் பணம் வழங்கல் வசதி இருந்தால், ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு குறிப்பிட்ட அளவு வரை அடிப்படை கணக்கிலிருந்து நீங்கள் பணம் எடுக்க முடியும். எனினும் கூடுதல் பணம் வழங்கல் வசதி மீது வட்டி விகிதம் மிக அதிகமானது என்பதை நீங்கள் அறிய வேண்டும். உங்கள் வங்கி, உங்களது பணப் பெறுமானத்தை மதிப்பிட்டு, அது ஏற்புடையது என்று அறிந்து கொள்வது கூடுதல் பணம் வழங்கல் வசதிக்கு ஒரு முன் நிபந்தனை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சந்தையில் விசாரித்தறியவும்

கடன் பெறுவதற்கான விலை வங்கியைப் பொறுத்து வேறுபடும். கடனின் வகையை வட்டி விகிதம் பொறுத்திருக்கும். ஆகையால் மிகவும் மலிவான கடனை எங்கே பெற முடியும் என்பதை விசாரித்தறிதல் நல்லது.

 

நிதி ஆலோசனை

நீங்களே விசாரித்தறியுங்கள்

பல வங்கிகளும் நிதி ஆலோசனை வழங்குகின்றன (உதாரணமாக ஒரு பட்ஜெட்டை எப்படி திட்டமிடுவது அல்லது கடன் வாய்ப்புகளை ஒப்பிடுவது போன்றவற்றில்). எனினும் நீங்களே எப்போதும் எல்லாவற்றையும் நன்கு விசாரித்து அறிய வேண்டும். உதாரணமாக பெரிய கடன்களை வாங்க முற்படும் முன் விசாரிக்க வேண்டும்.

ஒரு சுயேச்சையான ஆலோசனையாளரல்ல

வங்கி சாதாரணமாக நல்ல மற்றும் தொழில்முறை ஆலோசனையை வழங்குமென்றாலும் அது ஒரு சுயேச்சையான ஆலோசனையாளர் அல்ல. அது ஒரு தனியார் வர்த்தக நிறுவனம்.

சிக்கலான பிரச்னைகளை கணக்காயர் ஒருவர் கவனிக்கும்படி செய்தல்

உங்கள் நிதி விவகாரங்கள் சிக்கலானதாக இருந்தால், உதாரணமாக உங்கள் தொழிலை சொந்தமாக நடத்தினால் ஒரு கணக்காயரை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.

வாடகைக்கு எடுப்பதும், கடனில் வாங்குவதும்Audio

பல கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாடகை ஏற்பாடுகளை வழங்க முன் வருகிறது. குறிப்பாக அதிக விலையுள்ள குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டி, தொலைக்காட்சிப் பெட்டி அல்லது படச்சுருள் இயக்கிகள் போன்ற பொருட்களை வாடகையில் வழங்க முன்வருகின்றன.

பற்றில் வாங்குவது

சில வணிக நிறுவனங்கள் பற்று வசதிகளைத் தர முன்வருகின்றன. கொள்கையளவில் இது, ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் கடன் வாங்குவதற்கு சமமானது. இந்த சந்தர்ப்பங்களில், வட்டி விகிதம் பல சமயம் ஓரளவு அதிகமாகவே இருக்கும் என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும். மேலும், கடன் தருவதற்காக, வணிக நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கிறது.

ஒப்பந்தத்தை கவனமாகப் படிக்கவும்

ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் தவணை முறையில் அல்லது கடனாக வாங்க விரும்பினால் நீங்கள் ஓர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தம் ஏற்பாட்டின் நிபந்தனைகளையும் விதிகளையும் தெரிவிக்கும். ஒப்பந்தத்தை கவனமாக படித்து அறிய வேண்டியதும் அல்லது அதை உங்களுக்கு விளக்குமாறு செய்வதும் முக்கியமாகும். இல்லாவிடில் நீங்கள் எதிர்பார்க்காத விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ஒப்பந்த மீறல் உங்கள் கடனுக்கான வட்டி மற்றும் தவணைகளை செலுத்தத் தவறினால், நாணயமற்றவர் என்ற களங்கம் ஏற்படக்கூடும். அவ்வாறு நிகழந்ந்தால், நீங்கள் எதையும் தவணை முறையிலோ கடனாகவோ மறுபடியும் கடன் வழங்குபவரிடமிருந்தோ அல்லது பிறரிடமிருந்தோ வாங்க இயலாது. உங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் நீங்கள் டென்மார்க்கை விட்டுப் போனால் நீங்கள் செல்லும் நாட்டில் அப்பணத்தை கடன் அளித்தவர் வசூலிக்க முடியும்.

காப்பீடுAudio

தனிமுறை காப்பீடு

தனிமுறை காப்பீடு எடுத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

காயமடைந்தாலும் அல்லது திருட்டு, சேதமடைதல் ஆகியவற்றால் உங்கள் சொத்துக்கு ஏற்படும் இழப்புகளுக்கும் அல்லது ஒரு விபத்தால் நீங்கள் வேலை செய்யத் தகுதியற்றுப் போனாலும் நீங்கள் இழப்பீடு கோருவதற்கு இது உரிமையளிக்கிறது.

மூன்றாவது தரப்பு பொறுப்புக் காப்பீடு தான் மிக முக்கியமான காப்பீடு வகையாக இருக்கலாம். மற்றவர்களுக்கும் மற்றவர் சொத்துக்கும் நீங்கள் செய்யும் சேதம் இதன் வரம்பிற்குள் வருகிறது.

தெரிவு செய்வது கடினமானது

பல காப்பீட்டு நிறுவனங்களும் பல வகையான காப்பீட்டு நிறுவனங்களும் இருக்கின்றன. ஆயுள், தனிநபர் விபத்து மூன்றாவது தரப்பு பொறுப்பு காப்பீடு முதல் வீட்டுப் பொருட்கள், உடல் நலம் மற்றும் வாகனக் காப்பீடு வரை எனப் பல வகை இருக்கின்றன.

காப்பீட்டு நிறுவனங்கள் வெவ்வேறு வட்டி விகிதங்கள் மற்றும் நிபந்தனைகள் கொண்டுள்ளன. அவை அளிக்கும் சேவையையும், அவைகளுக்குரிய விலையையும் ஒப்பிடுவது கடினமான செயலாகும். ஆகையால் கூடுதல் செலவு கொண்ட காப்பீடு சிறந்தது என்று அனைத்து சமயங்களிலும் கருதிவிட முடியாது.

எந்தவிதமான காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்களோ, அப்போது காப்பீடு செய்ய விரும்பும் பொருட்கள், அதற்குச் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்பதையெல்லாம் கருதிப் பார்க்க வேண்டும்.

சட்டப்படியான காப்பீட்டு பாதுகாப்பு

சில காப்பீடுகள் கட்டாயமானவை. உங்களுக்கு ஒரு சொத்து சொந்தமானதாக இருந்தால் தீ விபத்து காப்பீடு கட்டாயமாகும். உங்களிடம் ஒரு நாய், ஒரு நான்கு சக்கர மோட்டார் வாகனம், ஒரு இரு சக்கர மோட்டார் வாகனம் போன்றவை இருந்தால் மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீடு ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறருக்கு நீங்கள் ஏற்படுத்தும் காயங்கள் மூன்றாம் தரப்பு காப்பீட்டு வரம்பிற்குள் வரும்.

நுகர்வோர் உரிமைகள்Audio

24மாதங்களுக்குள் புகார்கள் தெரிவிக்க வேண்டும்

ஒரு நுகர்வோர் என்ற முறையில், தவறாக வழி நடத்தப்படுவதிலிருந்து மற்றும் ஏமாற்றுப்படுவதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமைகள் உங்களுக்குண்டு. உதாரணமாக, எந்த ஒரு பொருளும் கோளாறு உள்ளதாகவோ, விற்பனையாளர் கூறியதற்கு மாறாகவோ இருக்கும்பட்சத்தில் அதை மாற்றித் தரும்படியோ அல்லது செப்பனிட்டுத் தரும்படியோ கோரும் உரிமை உங்களுக்கு உண்டு. பொருள் வாங்கியதிலிருந்து 24 மாதத்திற்குள் விற்பனையாளரைத் தொடர்பு கொள்ள வேண்டியது மட்டும்தான் நுகர்வோரின் கடமை. விற்பனைச் சீட்டை மறவாமால் காட்ட வேண்டும். அத்துடன் பொருளில் ஏற்பட்டுள்ள கோளாறுக்கு நீங்கள் காரணமல்லர் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

திருப்பிக் கொடுக்க உரிமை இல்லை

ஒரு பொருளை வாங்கிய பிறகு அதை விரும்பாத காரணத்தால் மற்றொரு பொருளுக்காக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடையாது. எனினும் பல நிறுவனங்கள் இந்த பரிமாற்றத்தை அளிக்க முன்வருகின்றன. சில நிறுவனங்கள் உங்கள் பணத்தைக்கூட திருப்பிக் கொடுக்கும். சில நிறுவனங்கள் அத்தொகைக்கு பற்றுச்சீட்டு வழங்கும் அல்லது வேறொரு பொருளாக மாற்றிக் கொள்ள அனுமதிக்கும்.

அறிவிப்பும், தகவல் வில்லை* முத்திரையிடுதலும்

நீங்கள் வாங்கும் உணவின் உட்பொருள் பற்றியும் உற்பத்தி செய்யப்பட்ட தேதி, பயன்பாட்டுக் கால வரம்பு ஆகியவை பற்றியும் உங்களுக்கு தகவல் அளிக்க வேண்டிய கடமை உண்டு. உணவுப் பொருள் முத்திரையிடுதல் மற்றும் கட்டுப்பாடு திட்டங்கள் பல இருக்கின்றன. உதாரணமாக, ஒரு பொருள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது அல்லது ஒவ்வாமையினால் பாதிக்கப்படுவோருக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் சோதனை செய்யப்பட்டிருக்கிறது என்ற உத்திரவாதம் கொடுக்கப்பட்டிருக்கும்.

புகார் வசதிகள் ஒரு வணிக நிறுவனம், விற்பனையாளர் அல்லது தொழில் நுட்பாளரிடம் அவரது பொருள் அல்லது பணிச்சேவை குறித்து புகார் செய்யும்போது நியாயம் கிடைக்கவில்லையென்று நீங்கள் கருதினால் டென்மார்க் நுகர்வோர் புகார்கள் வாரியத்திடமோ தனியார் புகார்கள் மற்றும் மேல் முறையீட்டு வாரியத்திடமோ புகார் ஒன்றை அளிக்கலாம். புகார் அளிப்பதற்கு பொதுவாக ஒரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உங்கள் புகார் நிரூபிக்கப்பட்டால் கட்டணத்தொகை திருப்பியளிக்கப்படும்.

டென்மார்க்கின் வரி அமைப்புAudio

நேரடி மற்றும் மறைமுக வரிகள்

டென்மார்க் வரி அமைப்பு முறையின் கீழ் எந்த தனியாரும், அரசு, மாவட்டம் மற்றும் நகராட்சிக்கு வருமான வரி செலுத்த வேண்டும். டென்மார்க் தேசிய திருச்சபை உறுப்பினர்கள் தேவாலய வரியும், தொழில் நிறுவனங்கள் தொழில் வரியும் செலுத்த வேண்டும்.

வருமான வரி தவிர சில மறைமுக வரியும் செலுத்த வேண்டும். நாம் ஒரு பொருளை அல்லது சேவையை வாங்கினால் Moms எனப்படும் மதிப்புக் கூட்டு வரி வடிவத்தில் மறைமுக வரி செலுத்த வேண்டும். மற்ற மறைமுக வரிகளில் பெட்ரோல், மதுபானம், புகையிலை போன்ற பல பொருட்களுக்கு தீர்வைகள் அடங்கியிருக்கின்றன.

வரி விகிதமும் வருமான வரி அறிக்கையும்

பணியிடத்திலேயே வரிப்பிடிப்பு செய்யப்படுகிறது. அதாவது, ஒவ்வொருவரின் மாதச் சம்பளத்திலிருந்து ஊதியம் மற்றும் சம்பளத்திற்கான வருமான வரி சம்பளத்தில் கழித்துக் கொள்ளப்படுகிறது.

உங்கள் வருமானம் மற்றும் வரித் தள்ளுபடிகள் பற்றிய தகவல் அடங்கிய வருமானவரி அறிக்கையை ஆண்டுக்கொரு முறை நீங்கள் அளிக்க வேண்டும்.ஜனவரி அல்லது பிப்ரவரியில் உங்களுக்கு வருமானவரி அறிக்கைக்கான படிவம் கிடைக்கும். அதை நீங்கள் மே மாதம் 1-ஆம் தேதிக்குள் திருப்பியனுப்ப வேண்டும்.

விசேடமாக சம்பளம் அல்லது ஊதியம் பெறுவோருக்குப் பொருந்தும், வரி அதிகாரிகளுக்குத் தேவையான விவரங்கள் பலவும் அவர்களுக்குத் தானாகவே அறிவிக்கப்பட்டிருக்கும்.

வரிவிலக்குக்குரிய செலவுகள்

வருமானத்திலிருந்து கழிக்கக்கூடிய செலவுகளே வரி விலக்குகள் ஆகும். அத்தகைய வரிக்குறைப்புகளில், கடன் மீதான வட்டிகள், தொழிற்சங்கக் கட்டணங்கள், வேலையின்மை காப்பீட்டு தொகை, குழந்தைகளுக்கான செலவு, பணியிடத்திற்கு சென்று வருவதற்கான போக்குவரத்துச் செலவு ஆகியவை அடங்கும்.

மேலே குறிப்பிட்ட வரித் தள்ளுபடிகளுடன் தனிநபர் ஒவ்வொருவரும், எந்த குறிப்பிட்ட செலவுடனும் சம்பந்தப்படாத சிறப்புத் தள்ளுபடியும் கோர முடியும்.

இந்த தள்ளுபடிகளில் சில, பல சமயங்களில் முன்கூட்டியே வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுகின்றன. எனினும், பலரும் தாங்களே தங்களது வருமானத்திலிருந்த கழிக்கக்கூடிய செலவுகள் சிலவற்றை சம்பந்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

வரி விகிதங்கள்

தனி குடிமகன் ஒருவர் செலுத்த வேண்டிய வரித் தொகையானது, அவரது வருமானம், சொத்து மற்றும் வருமானத்திலிருந்து கழிக்கப்படக்கூடிய செலவுகளைப் பொறுத்திருக்கும். மேலும், வருமான வரி விகிதங்கள் ஒரு நகராட்சிக்கும் மற்றொன்றிற்கும் வித்தியாசப்படும்.

முன்னேற்றம் சார்ந்த வரி அமைப்பு

டென்மார்க்கில் முன்னேற்றம் சார்ந்த வரி அமைப்பு உள்ளது. அதாவது, உங்கள் வருமானம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு வரி விகிதமும் அதிகமாக இருக்கும். அதிக பொருளாதார ஆற்றல் கொண்டவர்கள் அதிகப் பளுவை ஏற்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.



பொது நல அரசாங்கத்திற்கு நிதி வசதி செய்தல் ஆற்றல் உள்ளவர்கள் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் ஆதரித்துக் கொள்வதுடன், சமுதாயத்திற்கும் வரி செலுத்துவதன் மூலம் பங்காற்ற வேண்டும் என்பதே டென்மார்க் பொது நல அமைப்பு வகையின் அடிப்படை. அனைத்துக் குடிமக்களும் அவர்கள் பொது நிதி நிலைமையை பொருட்படுத்தாமல் நியாயமான வாழ்க்கை நிலைமைகளுக்கு உறுதி செய்யும் வகையில் சேவைகளின் நிலையை பராமரிப்பதே டென்மார்க் வரி அமைப்பு முறையின் குறிக்கோள்களில் ஒன்றாகும். சுகாதார சேவைகள் கல்வி, ஆராய்ச்சி, சாலை மற்றும் இருப்புப்பாதை கட்டுமானங்கள், பாதுகாப்புப் படைகள், சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு ஆகியவற்றுக்கும், அரசு வழங்கும் ஓய்வூதியங்கள், பணச் சலுகைகள் சுயமாக வாழப் போராடும் மக்களுக்கான சிறப்பு உதவிகள் போன்ற சமூகப் பணிகளுக்கும் வரி மூலமான வருவாய் ஒதுக்கப்படுகிறது.



கடைசி புதுநிலை: 31-08-2006
வெளியிடுவோர்: The Ministry of Refugee, Immigration and Integration Affairs
நுழைவாயில் பங்காளர்கள் அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகம் - டென்மார்க் குடியிறக்கச் சேவை