2. புவியியல் மற்றும் மக்கட்தொகை
டென்மார்க் பால்டிக் கடலுக்கும் வடகடலுக்கும் இடையே அமைந்து, ஏறத்தாழ முழுதும் தண்ணீரால் சூழப்பட்ட, மலைகளற்ற சமமட்டமான ஒரு சிறு தேசம். இது ஜட்லாந்து தீபகற்பம் மற்றும் 406 தீவுகளான கடல்/தீவுக்கூட்டம் இவற்றைக் கொண்டது. இதன் பெரிய தீவுகள் ஜீலாந்து, ஃப்யூனென், லோல்லாந்து, போர்ன்ஹோம் என்பன.
பிற தீவுகள், மிகக்குறைந்த மனிதர்களே வசிக்கும் அல்லது மனிதர்கள் வசிக்காத மிகச் சிறிய தீவுகள். டென்மார்க்கின் தனித்தனிப் பாகங்கள் முழுமையாகவோ ஓரளவோ தண்ணீரால் சூழப்பட்டவை. அவற்றில் பல, பாலங்களால் இணைக்கப்பட்டவை.
ஜீலாந்தில் இருக்கும் கோபன்ஹாகன் தலைநகரம். நாட்டின் மிகப்பெரிய பெருநகர் இதுவே. ஜாட்லாந்தில் இருக்கும் முக்கியப் பெருநகர்கள் ஆர்ஹூஸ், ஆல்போர்க், எஸ்ப்ஷர்க்.ஃப்யூனனின் முக்கியப் பெருநகர் ஓடென்ஸே.
டென்மார்க் இராச்சியப் பரப்பு
டென்மார்க் எனப்படுகையில் பெரும்பாலோர் ஜட்லாந்து மற்றும் டென்மார்க்கின் தீவுகளை நினைவில் கொள்கிறார்கள். இருந்தாலும்கூட அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில் இருக்கும், பெருமளவில் தன்னாட்சி செலுத்தும், கிரீன்லாந்து மற்றும் ஃபாரோ தீவுகள் இவையும் டென்மார்க் இராச்சியப் பரப்பில் அடங்குபவை.
டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU)* அங்கம் வகிக்திறது; எனினும் கிரீன்லாந்து மற்றும் ஃபாரோ தீவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதற்கு எதிராகத் தீர்மானம் கொண்டவை.
நார்டிக் நாடுகளுள் ஒன்று
ஸ்வீடன், நார்வே, ஃபின்லாந்து, ஐஸ்லாந்து இவற்றையும் உடைய நார்டிக் நாடுகளுள் டென்மார்க்கும் ஒன்று. தெற்கில் ஜெர்மனியுடனும் டென்மார்க்குக்கு ஒரு எல்லை இருக்கிறது. பால்டிக் கடலின் மறுபுறத்தில் இருக்கும் எஸ்டோனியா, லாட்வியா, லித்ஆனியா ஆகிய பால்டிக் நாடுகளுடன் டென்மார்க் நெருங்கிய உறவு பராமரிக்கிறது.
5% வெளி நாட்டவர்
டென்மார்க்கில் 5.2 மில்லியனுக்குச் (52 லட்சம்) சற்று அதிக அளவில் மக்கள் வசிக்கின்றனர். பல்வேறான பழக்கவேறுபாட்டுப் பேச்சு மொழிகள் இருப்பினும், அனைத்து டென்மார்க்கினரும் டேனிஷ் என்னும் ஒரே மொழி பேசுகின்றனர். சுமார் 260,000 மக்கள் – அதாவது மக்களில் 5% - வெளிநாட்டவர், அவர்களில் 80,000 பேர் நார்டிக் நாடுகள், ஐ.ஒ. (ஐரோப்பிய ஒன்றியம்) அல்லது அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள். ஏனையோர் கிழக்கு ஐரோப்பா, நடுக்கிழக்கு அல்லது ஆப்பிரிக்கா, கணிசமாக துருக்கி, பாகிஸ்தான், ஈராக், ஈரான், ஸோமாலியா, முன்னாளைய யூகோஸ்லாவியா இவற்றிலிருந்து வந்தவர்கள்.
அறிவு ஆதாரமான சமூகம்
இன்று, உயர்ந்த தொழில்மயமாக்கப்பட்ட, அறிவு ஆதாரமான ஓர் சமூகம் டென்மார்க். இது கல்வி, புதுமை புகுத்தல் இவற்றில் நாட்டமுடையது. டென்மார்க்கின் ஒரு விசேட குணம் அது சூழ்நிலைப் பாதுகாப்பு உயர்மட்டத்தில் இருப்பது. சூழ்நிலை பற்றிய தொழில் நுட்பங்களிலும், காற்றாடி இயந்திரப் பிரிவுகளிலும் உள்ள உன்னதமான உற்பத்திச் செயல்களில் இது பிரதிபலிக்கிறது.
டென்மார்க்குக்கு கணிசமான அயல்நாட்டு வாணிபம் உண்டு. மொத்த ஏற்றுமதியில் தொழில் சம்பந்தமான பொருள் சுமார் 75 சதவிகிதம், வேளாண் உற்பத்திப் பொருள் சுமார் 12 சதவிகிதம் என்ற கணக்கில் உள்ளன.
விரிவான பொதுப் போக்குவரத்து வலைப் பரப்பு
டென்மார்க்கில் சாலைகளும், இரயில் பாதைகளும் நிறைய உள்ளன. விரிவான பொதுப் போக்குவரத்து வலைப்பரப்பு உண்டு. எந்நேரத்திலும் நாட்டின் பெருவாரியான இடங்களுக்கெல்லாம் நீங்கள் பேருந்து அல்லது இரயில் மூலம் செல்ல முடியும். தவிரவும் பால இணைப்பு இல்லாத தேசப் பகுதிகளில் கப்பல் சேவை இடையிணைப்பு தருகின்றன.
தொழில் துறையில் வேலை செய்வோர் விகிதம் டென்மார்க்கில் ஏறத்தாழ 2.8 மில்லியன் மக்கள் உத்தியோகங்களில் உள்ளனர். உத்தியோகங்களின் முக்கியப் பிரிவுகள்:
ஆதாரம்: Danmark tal. Danmarks Statistik 2002.
| | சதவிகிதம் (முழு எண்ணாக) |
| வேளாண்மை, மீன்துறை, மூலப் பொருட்கள் | 4 |
| உற்பத்தித்துறை | 17 |
| சக்தி மற்றும் தண்ணீர் அளிப்பது | 1 |
| கட்டுமானத் துறை | 6 |
| வியாபாரம், தங்கும் ஓட்டல்கள், உணவகங்கள் | 18 |
| போக்குவரத்து, தபால், தொலைத் தொடர்பு | 7 |
| நிதி, உத்தியோகத்திற்கான சேவைகள் முதலியன | 12 |
| அரசுப் பணியாளர் மற்றும் தனியார் சேவைகள் | 35 |
| மொத்தம் | 100 |
மிதிவண்டி ஓட்டுபவர்களின் தேசம் உலகின் பல நாடுகளை விட டென்மார்க்கில் மிதிவண்டி ஓட்டுபவர் அதிகம் உள்ளனர். பெருநகரின் போக்குவரத்து நெரிசல் நேரங்களில் மிதிவண்டி ஓட்டுபவர் கும்பல் நிறையக் காணலாம். வேலைக்கு, பகலில் குழந்தை விடுமிடத்துக்கு செல்கை வருகை நேரங்களில் வண்டிகளின் சுமைதூக்கியில் குழந்தைகளும் உண்டு. பெரும்பாலும், போக்குவரத்தைத் திட்டமிடுகையில் மிதிவண்டி ஓட்டுபவர்களின் சௌகரியம் பார்க்கப்படும். மிதிவண்டிக்குத் தனிப்பாதைகள் உள்ளன. சாலைச் சந்திப்புகளில், கடக்கும் மிதி வண்டிக்காரர்களைப் பொருட்படுத்துமாறு மோட்டார் வாகனத்தோர்க்கு நினைவூட்டக் குறிகளும் உள்ளன.