3. டென்மார்க் – சட்ட விதிகளின்படி நிறுவப்பட்ட ஒரு ஜனநாயக சமுதாயம்
அரசு ஆட்சி முறை
டென்மார்க் அரசாட்சி பிரதிநிதித்துவ ஜனநாயகத்தால்* ஆனது. இதன் பொருள் மிக முக்கியமான தீர்மானங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளால் – டென்மார்க் நாடாளுமன்றத்திலும்*, மாவட்ட சபைகளிலும்*, வட்டார/நகராண்மை சபைகளிலும்* - செய்யப்படுகின்றன என்பது.
சட்டவியல், நிர்வாக, நீதித்துறை அதிகாரம்
டென்மார்க் அரசும், நாடாளுமன்றமும் சட்டம் இயற்ற வல்லவை. அமைக்கப்பட்ட சட்டங்களை அமுல் செய்வதற்கு அரசும் பொது நிர்வாகமும் உத்திரவாதம் மேற்கொள்கின்றன. நீதிமன்றங்கள் – பெருநகர்/மண்டல நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இவை – வழக்குகளுக்குத் தீர்ப்புகளும், ஏற்ற தண்டனைகளும் வழங்குகின்றன. உதாரணமாக, குடிமக்களுக்குள் நேரும், குடிமக்கள் – தனி அமைப்புகளுக்குள் நேரும், குடிமக்கள் – அரசு அதிகாரிகளுக்குள் நேரும் வழக்குகளாக இவை இருக்கலாம்.
அங்கீகாரங்கள் வகுக்கப்பட்டிருப்பதன் நோக்கம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும் பிரதிநிதித்துவ அரசுமுறையை* உறுதியாக இருக்க வைப்பதும் ஆகும்.
டென்மார்க்கின் அரசியல் சாசனம்
1849-இல் ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டது
டென்மார்க் ஜனநாயகம், அதாவது பிரதிநிதித்துவ அரசுமுறை, 1849-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது, 1660 முதலாக முடியாட்சி மன்னருக்குக்* கொடுக்கப்பட்டிருந்த அறுதியான அதிகார அந்தஸ்தை மாற்றியமைத்தது. 1849-ஆம் வருடத்தைய, டென்மார்க்குக்கு முதலான ஜனநாயக சாசனமே இந்த அரசாங்கத்துக்கு அடிப்படை ஆயிற்று. அதன் அடிப்படைக் கோட்பாடுகள், சாசனத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும், தற்போது வழங்கும் 1953-ஆம் வருட சாசனத்தில் உள்ளிட்டு அமைந்துள்ளன.
பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை 1915-இல் சாசனம் திருத்தி அமைக்கப்பட்டபோது தரப்பட்டது.
சாசனப்படி வரையறுக்கப்பட்ட உரிமைகள்
சாசனத்தில் அரசு விதிகள் உள்ளிட்டு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பெரிய அளவில் அடிப்படை உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் அது உறுதி அளிக்கிறது.
இவ்விதிகள் டென்மார்க்கின் மக்களுக்கு அவர்களது அன்றாட வாழ்க்கையில் மகத்தான விளைவுகளாய் உருவெடுத்துள்ளன எனலாம். ''சாசனத்தின்படி உரிமைகள்'' என்னும்போது அவை பேச்சு/எழுத்து வெளிபாட்டுச் சுதந்திரம், சங்கம் அமைக்கச் சுதந்திரம், மதச் சுதந்திரம், உடைமைக்குச் சுதந்திரம் இவற்றைக் குறிக்கும்.
அரச குடும்பம்
உலகின் மிகப் பழைய அரச பரம்பரை
தொன்று தொட்டு வருதலில் உலகிலேயே முதலிடம் பெறுவது டென்மார்க் அரச பரம்பரைதான். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அரசர்கள், அரசிகள், இளவரசர்கள், இளவரசிகள் டென்மார்க்கை ஆண்டிருக்கிறார்கள். பண்டைய அரசர்களில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் கோலோய்ச்சிய பழைய கோர்ம் (Gorm den Gamle) என்ற அரசர் பெயரே முதலில் தெரிந்த பெயர். 1660 முதல் 1849 வரை டென்மார்க் முழு முடியாட்சியாக இருந்தது.
சாசனப் படியான முடியரசு
இன்று, ஜனநாயகச் சட்ட திட்டங்களுள் இயங்கும் சாசனமுறை முடியரசு டென்மார்க். சட்டம் அமைக்கும் அதிகாரம் மன்னருக்கும், நாடாளுமன்றத்திற்கும் சேர்ந்து அமைக்கப் பெற்றது என்பது இதன் பொருள்.
மசோதாக்களைச் சட்டமாக்க எடுத்துச் செல்லும் ஏகபோக உரிமை டென்மார்க் நாடாளுமன்றத்துக்கே உண்டு. ஆனால் அவை சட்டமாவதற்கு முன் மன்னரின் கையொப்பம் பெறவேண்டும். அரச குடும்பத்திற்கு அரசியல் அதிகாரம் இல்லை எனினும் அக்குடும்ப உறுப்பினர்கள் டென்மார்க்கிலும் வெளிநாடுகளிலும் பற்பல பிரதிநிதித்துவக் கடமைகளை ஆற்றுகிறார்கள்.
1953-இல் டென்மார்க் அரசியல் சாசனம் ஏற்றுக்கொண்ட திருத்தத்தின்படி பெண்வாரிசு சிம்மாசனம் ஏறுவது அங்கீகரிக்கப்பட்டது.
சட்டம் அமைக்கும் அதிகாரம்
டென்மார்க்கின் தேசிய நாடாளுமன்றம் (Folketinget) பல்வேறான அரசியல் கட்சிகளிலிருந்து வரப்பெற்ற 179 உறுப்பினர்களைக் கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக பட்சக் காலவரை 4 வருடம் என தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இருந்த போதிலும், டென்மார்க்கின் பிரதம மந்திரிக்கு, நான்கு வருட கால வரைக்கு உள்ளாகவே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு அழைப்பு விடும் உரிமை உண்டு.
டென்மார்க் நாடாளுமன்றத்தின் இரு உறுப்பினர் க்ரீன்லாந்திலிருந்தும் இரு உறுப்பினர் ஃபாரோ தீவுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
திறந்த முறை மற்றும் ஒளிவு மறைவு அற்ற முறை
ஒரு பிரதிநிதித்துவ அரசு முறையின் மிகவும் முக்கியமான குணங்களுக்குள் திறந்த முறை, மூடுமறைவு அற்ற முறை இவை அடங்குபவை. நாடாளுமன்றத்தின் எல்லாப் பேச்சு விவாதங்களும் பொதுமக்கள் அறிய, திறந்த முறையில் உள்ளன. மேலும், எந்தக் குடிமகனும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்கலாம். வாக்காளர் சமூகம் பத்திரிகை மூலம் அரசியல் வழிமுறைகளின் கண்காணிப்பு, விமரிசித்தல் இவற்றைச் செய்கின்றன.
இராணி இரண்டாம் மார்க்ரெத் இராணி இரண்டாம் மார்க்ரெத் 1972 முதல் டென்மார்க்கின் முடியரசியாக இருந்து வருகிறார்கள். டென்மார்க் அரச குடும்பத்துக்கு மக்களிடையே மதிப்பு உண்டு. பலவிதங்களில் நாட்டின் ஒற்றுமைக்கும், பண்புகளுக்கும் அவர்கள் ஒரு சின்னம் என்றவாறு நோக்கப்படுகிறார்கள்.
நிர்வாக அதிகாரம்
பொது நிர்வாகம்
அரசாங்கம் ஒரு அல்லது பல அரசியல் கட்சிகளிலிருந்து வந்த அமைச்சர்களினால் ஆனது. இதன் தலைமையை பிரதம மந்திரி வகிக்கிறார். அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இழந்தால், அது விலகிட வேண்டும் அல்லது பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். பிரதம மந்திரி அமைச்சரவை அமைப்பார். ஒவ்வொரு அமைச்சருக்கும் அவர்களது பொறுப்புகள் தரப்படும். ஆட்சி அதிகாரம் அமைச்சகங்களுக்கு அளிக்கப்பட்டதாய் உள்ளது. இதில் வட்டார, மாவட்ட அதிகாரங்களும் அடங்கும். மொத்தமாக இவை ''பொது நிர்வாகம்'' எனப்படும்.
சட்ட அமைப்பை உண்டாக்குவதும், நிர்வகிப்பதும் அரசாங்கம் மற்றும் அமைச்சர்களின் மிகவும் முக்கியமான கடமைசார்ந்த வேலைகள்.
நீதித்துறை அதிகாரம்
சுயேச்சையான நீதி மன்றங்கள்
டென்மார்க்கின் நீதிமன்றங்கள் சுயேச்சையானவை. இதன் பொருள் அரசாங்கமோ அல்லது நாடாளுமன்றமோ அவற்றின் தீர்ப்புகளுக்கு சாதக பாதக மாற்ற விழைவு செய்ய இயலாது.
டென்மார்க்கில் ஒரு உச்ச நீதிமன்றம், இரண்டு உயர் நீதிமன்றங்கள், 82 பெருநகர்/மண்டல நீதிமன்றங்கள் உள்ளன. இதற்கு மேலாக, சிறப்புக் காரணங்கள் பற்றின வழக்குகளை ஆராய, சிறப்பு நீதிமன்றங்கள் பலவும் உள்ளன. உதாரணங்கள்: டென்மார்க் தொழில் நீதிமன்றம் (Arbejdsretten) மற்றும் டென்மார்க் கடல் பற்றின – வணிகம் பற்றின நீதிமன்றங்கள் (Sø -og Handelsretten).
மண்டல நீதி மன்றங்கள், உயர்நீதி மன்றங்கள்
பெரும் அளவில் வழக்குகள் – சிவில் நடப்புகள் குற்றவியல் நடப்புகள் இரண்டும் – மண்டல நீதிமன்றங்களில்* எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பெருமளவில் மறுவிசாரணைகள் மண்டல நீதிமன்றங்களிலிருந்து உயர்நீதி மன்றங்களுக்கு* வருகின்றன.
உச்சநீதிமன்றம்
டென்மார்க் உச்ச நீதிமன்றம் மிகத் தலையாய தேசிய நீதிமன்றம். இதுவே கடைசி மறுவிசாரணைக்கான நீதிமன்றம். இதன் பொருள் உச்சநீதிமன்றம் மறுவிசாரணை வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறது என்பது. பொதுவாக இவை உயர்நீதி மன்றங்களிலிருந்து வருபவை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வழக்கில் இறுதியானவை மேலும் நீதியில் முடிவானவை.
கடைசி மறுவிசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம்
எந்த குடிமகனும் ஒரு குற்றவியல் வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்ள விண்ணப்பித்து – உதாரணமாக, புது விவரங்கள் தோன்றியிருந்தா3லோ அல்லது நபருக்கு நீதிபதி அல்லது வாத வழக்கறிஞர் வழக்கைக் கையாளுவதில் அதிருப்தி இருந்தாலோ – கடைசி மறுவிசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் (Den Særlige Klageret) புகார் செய்யலாம்.
நகராட்சி மன்றங்களும் மாவட்டங்களும்
குடிமக்களுக்கு அருகாமையில்
வட்டார/நகராட்சி சபைகளாகவும், சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட சபைகளால் நிர்வகிக்கப்படும் மாவட்டங்களாகவும் டென்மார்க் பிரிக்கப்பட்டுள்ளது. இயன்ற அளவில் நிர்ணயங்கள் குடிமக்களுக்கு அருகாமையில் செய்யப்படுவதை இது நிச்சயப்படுத்துகிறது.
டென்மார்க் நாடாளுமன்றமும் அரசும் செயலுக்குரிய சட்டதிட்ட வரம்புகளை அளிக்க, நகராட்சி மன்றங்களும் மாவட்டங்களும் அவற்றைச் செயல்படுத்துவதற்குப் பொறுப்பானவை.
இம்முறையில், நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை (டென்மார்க் ஒருமைப்பாடு பற்றிய சட்டம்*) தன்னுள் ஏற்றுக் கொண்டது. இச்சட்டம், புதிய குடுமக்கள் டென்மார்க் சமூகத்துடன் ஒருமைப்பாடு பெறுவதை ஊக்குவிக்க நகராட்சி சபைகளுக்கு இடம் தருகிறது.
அரசியல் கட்சிகளும் கட்சி சாரா பட்டியல்களும்
நகராட்சி சபைகள் மேயர்களைத் தலைமையிலும், பல வட்டார சபை உறுப்பினர்களையும் கொண்டது. அனைவரும் நேரடி வாக்குப் பதிவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வட்டார மற்றும் மாவட்ட சபைத் தேர்தல்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைசெய்யப்படும். அரசியல் கட்சியினரும் கட்சி சாரா பட்டியல்களில்* இடம் பெற்றோரும் தேர்தலில் வேட்பாளர்கள் ஆவர்.
தன்னாட்சி நகராண்மை
பலவிதங்களில், மாவட்ட சபைகள் வட்டார செயல் திட்டங்களைப் பின்பற்ற அனுமதிக்கப்படுகின்றன. வரி அளவு, பகலில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் நிறுவனங்கள், மருத்துவச் சாலைகள், ஓய்வுச் செயல்கள், கலாசாரம் பற்றின செயல்கள் இவை நகராட்சிக்கு நகராட்சி மாறுபடுவதற்கு இதுவே காரணம்.
வட்டார அரசு அமைப்பு
மாவட்ட சபைகள், வட்டார மட்டத்தில் செய்யப்பட வேண்டிய பற்பல கடமைசார்ந்த வேலைகளை மேற்கொள்கின்றன. உதாரணமாக, பொதுப் போக்குவரத்தின் பகுதிகள், மருத்துவமனைகள் நடத்துதல், பொதுவான சூழ்நிலை மேற்பார்வைக் கட்டுப்பாடு.
தேர்தலும், அரசியலில் பங்கு கொள்வதும்
வாக்கு அளிக்கும் உரிமை
18 வயது ஆகும்போது அனைத்துக் குடிமக்களுக்கும் வட்டார மற்றும் மாவட்ட சபைத் தேர்தல்களில் வாக்களிக்கவும் மற்றும் போட்டியிடவும் உரிமை உண்டு. ஆயினும், ஐரோப்பிய ஒன்றியம்* மற்றும் நார்டிக் நாடுகள் தவிர, பிற நாடுகளில் குடிமை பெற்றவர் டென்மார்க்கில் குறைந்தது கடந்த 3 ஆண்டுகள் நிரந்தரமாக வசித்திருக்க வேண்டும்.
தேசியத் தேர்தல்கள், கருத்துக் கணிப்பு இவற்றில் பங்கு பெற நீங்கள் டென்மார்க் குடிமை பெற்றிருக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பின நாடுகளின் குடுமக்களுக்கு, தாம் வசித்து வரும் நாட்டிலிருந்தோ தன் சொந்த நாட்டிலிருந்தோ, ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு* வாக்களிக்க உரிமை உண்டு.
வாக்கு அளித்தல் ஒரு முக்கிய சமூகக் கடமை
தேர்தல் அல்லது கருத்துக் கணிப்புக்கு முன்னால், வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள், எங்கு எப்போது வாக்களிக்க வேண்டும் என்று குறிக்கும் வாக்குச் சீட்டு பெறுவார்கள்.
வாக்களிக்கும் உரிமையைச் செயல் வழியாக்கல் டென்மார்க் குடிமகனாக இருப்பதன் ஒரு முக்கிய அம்சம். ஒரு தனிக்குடிமகன் நம் சமுதாயத்திலும் அன்றாட வாழ்க்கை முறையிலும் மாற்றம் கொண்டு வருவதற்கு இது ஒரு முக்கியமான வழியும் ஆகும்.
அரசியல் கட்சிகள்
வட்டார மற்றும் மாவட்ட சபைத் தேர்தல்களில் போட்டியிடுவோர் நியமனம் மீது உங்கள் சொல் எடுபடவோ – அல்லது நீங்களே தேர்தலில் போட்டியிட நியமனம் பெறவோ – நீங்கள் ஒரு அரசியல் கட்சியில் சேரலாம் அல்லது கட்சி சாரா பட்டியலில் நியமனம் பெற தங்கள் பெயரை அளிக்கலாம்.
தேசியத் தேர்தலில் போட்டியிடுவோர் நியமனத்தின் மீது உங்கள் சொல் எடுபட, நீங்கள் ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
ஒருமைப்பாடு சபைகள் நிறைய நகராட்சி மன்றங்கள் விசேடப் பிரச்சனைகளுக்கு ஆவன செய்ய, பல ஆலோசனைக் குழுக்களைக் கொண்டன. வயது முதிர்ந்த குடிமக்கள் ஆலோசனைக் குழு, இளைஞர் ஆலோசனைக் குழு, ஒருமைப்பாடு ஆலோசனைக் குழு இவை இவற்றுள் அடங்கும், ஒருமைப்பாடு குழுக்களின் கடமைசார்ந்த வேலை நகராட்சி மன்ற சபைக்கு ஒருமைப்பாடு விஷயங்களில் வழி காட்டுவது. ஒருமைப்பாடு ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதா - அல்லது ஏற்படுத்தப்படுமா – என்பது பற்றி உங்கள் நகராட்சி அதிகாரி உங்களுக்குக் கூறுவார். அவ்விதம் இல்லையானால் ஒரு ஆலோசனைக் குழு வேண்டி நீங்கள் விண்ணப்பிக்கலாம். நகராட்சி அதிகாரம், ஒருமைப்பாடு ஆலோசனைக் குழுவுக்கு அலுவலகப்பணிக்குத் தேவையான வசதிகளைச் செய்துதர வேண்டும். நகராட்சி ஆலோசனை சபைகளின் தேர்தல் சம்பந்தமான விஷயம் இது. ஓர் இட ஒருமைப்பாடு ஆலோசனைக் குழுக்கள், தேச அளவிலான இனச் சிறுபான்மையோர் சபைக்கு (Radet for Etniske Minoriteter) அங்குள்ள அகதிகள் அல்லது குடியிறங்குவோர்களிலிருந்து நபர்களைப் பிரதிநிதியாக நியமிக்கும். இந்தச் சபை அகதிகளின் மற்றும் குடியிறங்குவோர்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து, அகதிகள் குடியிறக்கம் ஒருமைப்பாடு விவகார அமைச்சருக்குஆலோசனை தரும்.
அரசியல் கட்சிகளும் அரசு சாரா அமைப்புகளும் நீங்கள் சமுதாயத்தில் சாதக மாறுதல் விளைவிக்க, தேர்தல்களில் வாக்களிப்பது அரசியல் கட்சியில் உறுப்பினராவது இவை தவிரவும் வழிகள் உண்டு. உதாரணமாக, குறிப்பிட்ட அணிகளின் ஆர்வநலம் பேணும் சங்கங்களில், அதாவது தன்னார்வக் கழகத்தில் அல்லது அரசு சாரா அமைப்பில், செயல்புரியும் உறுப்பினராக நீங்கள் ஆகலாம். டென்மார்க் ஜனநாயகத்தில் அரசு சாரா அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏனெனில் இவை பொதுஜன விவாதங்களுக்குப் பங்கு தருவதுடன், அரசியல்வாதிகள் உண்டாக்கும் பிரேரணைகளுக்கும் இவற்றின் குறிப்பு கேட்கப்படுகிறது. பொதுவாக ஒரு மசோதாவை டென்மார்க் நாடாளுமன்றம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும்முன், அவ்விஷயத்தில் குறிப்பிட்ட அறிவு, ஆர்வம் கொண்ட பல அமைப்புகளின் ஆலோசனைக்கென அது ஒப்புவிக்கப்படுகின்றது. அரசு சாரா அமைப்புகளும் – சிகிச்சை பெறுவோர் அமைப்புகள், சூழ்நிலை பற்றிய அமைப்புகள், தொழில் பற்றிய அமைப்புகள் போன்றவை – தாங்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் காரணங்களுக்கு நன்மை கருதி, சம்பந்தப்பட்ட பிரேரணைகளை அவர்களிடம் ஒப்புவிக்க அரசியல்வாதிகளைத் தூண்டுகிறார்கள்.
சட்ட விதிகளின்படி நிறுவப்பட்ட ஒரு சமுதாயம்
டென்மார்க் ஒரு ஜனநாயகம் என்ற உண்மையில் தொக்கி நிற்கும் கருத்து அது சாசனப்படி (சட்ட விதிகளால்) அமைந்த சமூகம் என்பதே. இதன் பொருள் ஆளும் அதிகாரம் ஜனநாயக ரீதியில் கட்டுப்பட்டது என்பதும், நீதிமன்றங்கள் அரசாங்கத்தினின்று தனித்து இயங்குவது என்பதும் ஆகும். மேலும் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட உரிமைகளையும் சுதந்திரஙகளையும் பெற்றுள்ளனர் என்பதே இதன் பொருள். தவிர, ஒவ்வொருவரும் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க கடமை உண்டு. ஒவ்வொருவரும் நிர்வாகத்தின் அதிகாரிகளாலும், நீதிமன்றங்களாலும் நல்ல முறையில் நடத்தப்பட வேண்டும் என்ற உரிமையும் உண்டு.
பணியிட இரகசியம் காத்தல்
அனைத்துப் பொது அதிகாரத்தின் பணியாளர்களும் பணியிடத்து இரகசியம் காக்கக் கடமைப் பட்டவர்கள். உங்களிடமிருந்து பெறும் எந்த விஷயத்தையும் இதனால் அவர்கள் பிறர் எவருக்கும், உதாரணமாக உங்களுக்கு வேலை அளிப்பவருக்கோ அல்லது உங்கள் மருத்துவருக்கோ அனுப்ப உங்கள் அனுமதி பெற வேண்டும்.
ஆவணங்களை அறிய அணுகுதல்
டென்மார்க் பொது நிர்வாகச் சட்டப்படி, உங்கள் விவகாரக் கோப்புகளை அறிய அணுகும் உரிமை உங்களுக்கு உண்டு. நீங்கள் இந்த ஆவணங்களை அறிய விண்ணப்பித்தால், பொதுவாக, விவகாரக் கோப்புகளில் உள்ளது உங்களுக்குச் சொல்லப்படும்.
ஆயினும், ஒருகால் அதிகாரிகள் ஏதேனும் விவரங்கள் வெளிப்படுவதால் யாராவது மூன்றாமவருக்குத் தீங்கு நேரலாம் என்று கருதினால், அணுகும் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
டென்மார்க் நாடாளுமன்றத்தின் ஓம்பட்ஸ்மன்
டென்மார்க் நாடாளுமன்றத்தின் ஓம்பட்ஸ்மன் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படுகிறார். இவர் பொது நிர்வாக விவகாரங்களில் நேரக்கூடிய தவறுகள் அல்லது அலட்சியங்கள் பற்றி நடவடிக்கை எடுக்கிறார். புகாரைத் தொடர்ந்தோ அல்லது தானே மேற்கொண்டோ ஓம்பட்ஸ்மன் குறுக்கிடலாம். அரசாங்கத்திடமிருந்து தனித்து சுதந்திரமாக ஓம்பட்ஸ்மன் இருக்கிறார்.
அதிகாரிகள் சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் போனாலோ அல்லது விவகாரத்தில் நடவடிக்கையில் தவறு ஏற்பட்டாலோ எவரும் உதவிக்கு ஓம்பட்ஸ்மனுடன் தொடர்பு கொள்ளலாம். ஆனால், உள்ள பிற புகார் வழிகள் அனைத்திலும் முதலில் முயற்சி செய்திருக்க வேண்டும். ஓம்பட்ஸ்மன் சேவை எல்லாக் குடிமக்களுக்கும் இலவசமானது.
குடிமக்களின் உரிமை, தவிர, பொது அதிகாரிகள் மீது எவ்விதம் புகார் கொடுப்பது டென்மார்க் பொது நிர்வாகச் சட்டம், பொது அதிகாரிகள் குடிமக்களை நல்ல முறையில் நடத்தக் கோருகிறது. இந்த சட்டத்தின் கீழ், ஒரு விண்ணப்பத்தையோ கோரிக்கையையோ நிராகரிக்கும் காரணம் கூறியாக வேண்டும். இதற்கு மேலும், பொது அதிகாரிகள் புகார் எங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு எப்போதும் வழிகாட்ட வேண்டும். இந்தச் சட்டத்தில், புகார் நடவடிக்கைக்குக்கான கால வரம்பும் குடிமக்கள் எந்தவித விவரம் பெற உரிமை உள்ளவர்கள் என்பதற்கான ஏற்பாடுகளும் அடங்கியுள்ளன. சுருக்கமாக, இந்தச் சட்டம் விவகார நடவடிக்கைகளுக்கு அமைச்சர்கள், நிறுவனங்கள், சபைகள், வாரியங்கள்/குழுமங்கள், கமிட்டிகள், நகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரிகள் பற்றவேண்டிய செய்முறைகளுக்கான விதிகளை வகுக்கிறது.
குற்றமும் தண்டனையும்
ஒரு நபர் சட்டவிரோதக் குற்றச் செயல் புரிந்ததாகச் சந்தேகம் எழுந்தால், காவல்துறை புலனாய்வு மேற்கொள்ளும், அரசு வழக்கறிஞர் சேவை குற்றச்சாட்டு வழக்கு மேற்கொள்ளும், நீதிமன்றங்கள் குறிப்பிட்ட நபர் தண்டனை பெறவேண்டுமா என்பதை நிர்ணயிக்கும்.
நீதிபதியின் முன் 24 மணிக்குள் வர உரிமை
சட்ட விரோதச் செயல் குறித்துக் கைதாகி குற்றம் சுமத்தப்பட்ட எவருக்கும், ஒரு நீதிபதியின் முன் 24 மணிக்குள்ளாக கொண்டுவரப்பட உரிமை உண்டு. அந்த நபர் மேலும் புலனாய்வு நடவடிக்கையில் காவலில் வைக்க வேண்டுமா என்பதை நீதிபதி தீர்மானிப்பார்.
குற்றவியல் சந்தேகத்துக்கு ஆளானோருக்கு, காவலர் விசாரணைக் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் சும்மா இருக்கவும், சட்டப் பிரதிநிதி ஒருவரைக் கலந்து கொள்வதற்கும் உரிமை உண்டு.
அபராதமும் சிறைத் தண்டனையும்
இரு வேறு வகைப்பட்ட தண்டனைகள் உள்ளன: அபராதம் கட்டுதலும் சிறைத் தண்டனையும்.
தற்காலிக நிறுத்தமும், தற்காலிக நிறுத்த நீக்கமும்
சிறைத் தண்டனைத் தீர்ப்புக்கு, தற்காலிக நிறுத்தம் செய்யப்படலாம் அல்லது தற்காலிக நிறுத்த நீக்கம் செய்யப்படலாம். தற்காலிக நிறுத்தம் பெற்றவர்கள் சட்ட விரோதச் செயல்கள் புதிதாய்ச் செய்தால் மட்டும் சிறைக்குச் செல்வர். ஆயினும், குற்றம் இழைத்தவர் மீது பிற நிபந்தனைகள், உதாரணத்துக்கு சிகிச்சை பெற விரும்புமாறு, விதிக்கப்படலாம்.
மரண தண்டனை இல்லை
டென்மார்க்கில் மரண தண்டனை இல்லை. ஆகவே, ஆயுள் (சிறைத்) தண்டனையே நீதிமன்றம் தரக்கூடிய மிகக் கடும் தண்டனை ஆகும்.
15 வயதுக்குக் கீழான இள மக்கள்
15 வயதுக்குக் கீழான இளைய மக்களைத் தண்டனைக்கு உட்படுத்த முடியாது. பதிலாக, குறிப்பிட்ட சமூக வரைமுறைகளை அவர்கள் மீது கொண்டு வரலாம்.
உதாரணத்திற்கு, அந்த இளைய நபர் பல்வேறு பயிற்சிகளைக் கற்க வேண்டி வரலாம் அல்லது பாதுகாப்பான இளைஞருக்குரிய அமைப்புக்கு அனுப்பப்படலாம்.
குற்றப் பதிவு
தற்காலிக நிறுத்தம் பெற்றதோ, தற்காலிக நிறுத்த நீக்கம் பெற்றதோ இரண்டுக்கும் தீவிர விளைவு இருக்கலாம். தண்டனை அடைந்த குற்றவாளியின் குற்றவகை இன்னது, தண்டனை இன்னது என்ற விவரம் கொண்ட குற்றப் பதிவு இருந்து வரும்.
வேலை தருவோர் வேலை கொடுக்கும் முன், குற்றப் பதிவின் நகலை வேண்டலாம் என்பதால், குற்றம் இழைத்தோர்க்குப் பின்னாளில் வேலை கிடைப்பதில் இன்னல் நேரக்கூடும் என்பது இதன் பொருள் ஆகலாம்.
இலவச சட்ட சம்பந்த உதவி
பொது அதிகாரங்களிலிருந்து நிதியுதவி
குறைந்த வருமானம் உள்ளவர்கள் சட்ட சம்பந்த நிதியுதவி தருவது ஏற்கப்பட்டால், பொது அதிகாரங்களிலிருந்து, வழக்கு சம்பந்தக் கட்டணங்களுக்கும், வழக்குக்கான செலவுகளுக்கும் நிதியுதவி கிடைக்கப் பெறுவீர்கள்.
சட்ட சம்பந்த உதவி
சட்ட சம்பந்தமான பிரச்சினை உங்களுக்கு இருந்தால், நீங்கள் சட்ட சம்பந்த உதவி மையத்தையோ, சட்ட ஆலோசனை அலுவலகத்துடனோ (Advokatvagten) தொடர்பு கொள்ளலாம். அங்கு, சட்ட சம்பந்தப் பிரச்சனைக்கு முடிவுகாண, வழக்கறிஞர்கள் அநாமதேயமாக ஆலோசனைகளை இலவசமாகவோ, கட்டணத்திற்கோ, அல்லது மிதமான கட்டணத்திற்கோ தருவார்கள்.
டென்மார்க் காவல் துறை
எவரும் காவல் துறையின் உதவி நாடலாம்
காவல் துறையின் பிரதானப் பொறுப்பு சட்டம் ஒழுங்கு இவற்றை நிலை நிறுத்துவதும், குற்றங்களைத் தடுப்பது புலனாயும் குற்றத்தின் தீர்வு காண்பது இவையும் ஆகும். தொலைந்த பொருள் திரும்பிப் பெறவோ, காணாமற்போன நபர்களைக் கண்டு பிடிக்கவோ, குற்றவியல் செயல் குறித்து முறையிடவோ எவரும் காவல் துறையுடன் தொடர்பு கொள்ளலாம்.
உதாரணமாக, நீங்கள் திருட்டு அல்லது துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தாலோ அல்லது பாரபட்சச் செயல்களுக்கு ஆளாகியிருந்தாலோ, நீங்கள் காவலருடன் தொடர்பு கொள்ளலாகும்.
பாஸ்போர்ட்டுகள், வாகன ஓட்டுனர் உரிமம் இவற்றையும் காவல் துறை வழங்குகிறார்கள்.
ஆர்ப்பாட்ட அணிகள்
டென்மார்க்கில் எவரும், முன்னதாக ஆர்ப்பாட்டம் குறித்து காவலருக்குத் தெரிவித்திருந்தால் மட்டும், ஆர்ப்பாட்ட அணி நடத்தும் உரிமை உள்ளவர்கள். ஆர்ப்பாட்ட அணிகளின்போது, அவை அமைதியான முறையில் நடப்பதை உறுதி செய்ய, காவலரும் உடன் இருப்பர்.
பள்ளி, சமூகம் மற்றும் காவல் திட்டம்
பல பகுதிகளில், இளைய மக்களிடையே குற்றம் நேருவது தவிர்க்க, பள்ளி, சமூகம் மற்றும் காவல் (''Skole'', ''Sociale Myndigheder'' மற்றும் ''Politi'') திட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டு முயற்சியாக, பள்ளி மற்றும் சமூக அதிகாரங்களுடன் காவலர் ஒத்துழைக்கின்றனர்.
காவலருக்கு விதிமுறைகள்
ஒரு நபரை நிறுத்தும்போதும், கைது செய்கையிலும், விசாரணைக் கேள்விகளின்போதும் காவலர் பல விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டுச் செய்ய வேண்டும். உதாரணமாக, அவர்கள் துன்புறுத்துதல் நேருமென மிரட்டுவது மேற்கொள்ளலாகாது. தவிர கைதானவர்க்கு, அவர்கள் உரிமை இன்னதென படிக்கப்பட வேண்டும்.
காவலருக்குப் பொதுஜன ஆதரவு உள்ளது
பொதுவில், மக்களிடையே பேராதரவு பெற்ற காவலர், டென்மார்க்கின் வேலைத்திறம் பெற்றவர் தொகுதிகளுள் ஒருவர் எவரையேனும் காவலர் நடத்தின விதம் அதிருப்தி அளித்திருந்தால் அரசு வழக்கறிஞர்களிடம்* புகார் செய்யலாம்.
அரசு வழக்கறிஞர் சேவை ஒரு புகாரை எடுத்துக்கொள்ளும் விதத்தை வட்டார காவல்துறை புகார்கள் குழுமம்* கண்காணிக்கிறது. அரசு வழக்கறிஞர் சேவை எடுக்கும் புகார் நடவடிக்கையில், சுயேச்சையாய் இயங்கும் இந்தக் குழுமத்தினால், மாற்றும் பாதிப்புத்தர இயலும்.
தன் போக்கில் சட்டத்தைக் கைமேற்கொள்ளல் தடுக்கப்பட்டது
தன்போக்கில் சட்டத்தைக் கைமேற்கொள்ளல், உதாரணமாக, எரிச்சல் மூட்டித் துன்புறுத்தப்பட்ட காரணம் கருதி எவரையேனும் தாக்குவது தடுக்கப்பட்டது; மேலும் அது தண்டனைக்குரிய செயல்.
பரந்த உலகில் டென்மார்க்கின் பங்கு
அனைத்து நாட்டு ஒத்துழைப்பு
தேச எல்லை கடந்தவாறு நாடுகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பு என்பதில், ஒரு சிறிய நாடான டென்மார்க் தீவிர ஆர்வம் கொண்டது. எனவே டென்மார்க் பலவகைப்பட்ட அனைத்து நாட்டு உறவுகளில் பொதிந்து செயல்படுகிறது.
டென்மார்க் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் உதாரணங்கள் ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐரோப்பிய சபை, ஐக்கிய நாடுகள் (FN), வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO), பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்படுத்தல் அமைப்பு (OECD), உலக சுகாதார அமைப்பு (WHO) இவையாவன.
அனைத்து நாட்டு கோட்பாடுகள்
இந்த விஷயத்தில், டென்மார்க் மனித உரிமை பற்றின பல அனைத்து நாட்டு கோட்பாடுகளில் கையொப்பம் இட்டுள்ளது. இவற்றில் துன்புறுத்தலுக்கு எதிரான ஐ.நா. கோட்பாடு, எல்லா வித இன பாரபட்சங்களையும் எதிர்க்கும் ஐ.நா. கோட்பாடு, மகளிருக்கு எதிரான அனைத்துவித பாரபட்சங்களையும் எதிர்க்கும் ஐ.நா. கோட்பாடு, குழந்தைகள் உரிமைகள் குறித்த ஐ.நா. கோட்பாடு இவை சில.
ஐரோப்பிய சபையில் அங்கம் வகிப்பதால், மனித உரிமை மீதான ஐரோப்பிய கோட்பாடுகளை டென்மார்க் ஏற்று உறுதிசெய்துள்ளது. டென்மார்க் சட்ட திட்டங்களில் இது முக்கிய அளவில் நற்பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஐ.ஓ
1973 முதலாக டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) அங்கம் வகித்து வந்திருக்கிறது. முன்னாளில் இது ஐரோப்பிய பொருளாதார சமுதாயம் (EF) என்ற பெயரில் இருந்து வந்த அமைப்பாகும். டென்மார்க் அச்சமுதாயத்தில் சேர்ந்தது முதலாக, டென்மார்க் மீது ஐ.ஓ. பல விஷயங்களில் மாறுதலுக்கான பாதிப்பை அதிகரித்தவாறாக உள்ளது. டென்மார்க் மக்களிடையே ஐ.ஓ. சம்பந்தம் குறித்து அவ்வப்போது இருவேறான கருத்துகள் உண்டு.
ஐ.நா.
ஐ.நா.வில் அங்கம் வகிப்பதன் மூலம் துன்பத்திலுள்ள மக்களுக்கு உதவி செய்யவும், உலகளவில் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடவும், மனித உரிமைகளுக்கு மதிப்பினைக் கூட்டவும் டென்மார்க் விரும்புகிறது.
நேடோ
நேடோ படைத் துறை நட்புத் தொடர்பிலும், OECD எனும் மேற்குப் பொருளாதார அமைப்பிலும் டென்மார்க் அங்கம் கொண்டது. இது டென்மார்க், அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இவற்றை இறுக்கமாகப் பிணைத்துள்ளது.
அனைத்து நாட்டு முன்னேற்ற ஒத்துழைப்புத் திட்டங்கள்
ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க ஏழை தேசங்களுக்கான முன்னேற்ற ஒத்துழைப்புத் திட்டங்களுக்கு, ஐ.நா. வரையறுப்பு செய்த மொத்த தேசிய வருமானத்தில் 0.7% என்ற விகிதத்தைவிட, அதிகம் பங்களிக்கும் நாடுகளுள் டென்மார்க்கும் ஒன்று.
ஐ.நா. மூலமாகவோ, பிற அனைத்து நாட்டு அமைப்பு மூலமாகவோ, ஏற்கும் நாட்டுக்கு நேரிடையாகவோ இந்தப் பொருளாதார உதவி பிரித்தளிக்கப்படுகிறது.
பெருமளவுக்கு, தம் நாட்டின் சமூக முன்னேற்றத்துக்குப் பொறுப்பு மேற்கொள்ளச் சக்தியூட்டுவது கருதி, ஏற்கும் நாடுகளின் நெருங்கிய ஒத்துழைப்பின் அடிப்படையில், இந்த உதவிகள் அமைகின்றன.
மிகவும் ஏழ்மையானோர்க்கு உதவி, இரு பால் சமத்துவம், ஜனநாயகம், மனித உரிமை, தக்க வைப்பதில் திறம் இவை, டென்மார்க் அளிக்கும் முன்னேற்றத்திற்கான உதவி குறித்த, முக்கியப் பதங்கள்.